Tuesday, January 31, 2017

ஊர் ஸ்பெஷல் - கல்லிடைகுறிச்சி அப்பளம் ! (பாகம் - 2 )

ரொம்ப நாள் ஆச்சு இந்த ஊர் ஸ்பெஷல் பதிவுகள் போட்டு, அதுவும் இந்த கல்லிடைக்குறிச்சி அப்பளம் முதல் பாகம் போட்டு மாதங்கள் ஆகி விட்டது, இன்னும் இரண்டாம் பாகம் வரவில்லையே... அப்பளமே நமுத்து போச்சு என்றெல்லாம் செல்லமான திட்டல்கள் ! என்ன செய்வது, ஒவ்வொரு முறை ஊர் ஸ்பெஷல் எழுதும்போதும் நிறைய ஆராய்ச்சிகள் செய்ய வேண்டி இருக்கிறது, இதை தமிழ்நாட்டின் பெருமை மிகு ஆவணமாக இருக்கவேண்டும் என்று மிகுந்த சிரத்தை எடுத்து செய்வதால், கொஞ்சம் அதிக காலம் ஒவ்வொரு பதிவிற்கும் ஆகிறது..... சில நேரங்களில் சந்தேகம் வரும்போது, மீண்டும் அங்கு சென்று அதை நிவர்த்தி செய்ய வேண்டியும் இருக்கிறதே ! சரி, சென்ற முறை கல்லிடைக்குறிச்சி அப்பளம் (பாகம் - 1) பார்த்தோம், அதில் அப்பள மாவு செய்வது வரை பார்த்தோம்.... இந்த முறை அப்பளம் செய்வது, காய வைப்பது, அடுக்குவது, பேக்கிங் என்று எல்லாமும் பார்ப்போமா ?!




அப்பள மாவை உருண்டை உருண்டையாக செய்து வைத்த பிறகு, அதை வைத்து தேய்ப்பதற்கு பூரி கட்டைகள் எங்கே என்று எனது கண்கள் தேடியது. ஜென்டில்மேன் படத்தில் பாட்டிகள் எல்லாம் உட்கார்ந்துக்கொண்டு அப்பளம் உருட்டுவது போல இருந்ததே, அது எப்படி எல்லா அப்பளமும் ஒரே மாதிரி அச்சில் வார்த்தது போல ஒரே சைஸில் செய்கிறார்கள் என்று பாட்டிகளை தேடினேன் ! எனது கேள்வியை கண்களால் புரிந்துக்கொண்டு அப்பளம் செய்வதற்கு மெஷின் வந்து விட்டது என்றனர். அப்பளம் செய்வதற்கு மெஷினா...என்று ஆச்சர்யம் வந்தது ! மேலே மாடியில் இருந்த அப்பள மெஷின் காண்பித்தபோது.... டெக்னாலஜி ரொம்பதான் வளர்ந்துடுச்சு என்று தோன்றியது !





வேக வைத்த மாவை அப்பள மெஷினின் மேலே ஒரு இடத்தில் உள்ளே போட, அது உருளைகளுக்கு நடுவே சிக்கி ஒரு போர்வை போல நீளமாக வர ஆரம்பித்தது, அங்கே இன்னொரு உருளை ஒன்று வட்ட வட்டமாக கட் செய்து கொண்டு இருந்தது. சிறிய, மத்திமம், பெரிய சைஸ் உருளைகள் இருப்பதாகவும், வேண்டிய போது இந்த உருளைகள் மாற்றப்படும் என்றனர். உருளைகளை பார்வையிட்ட எனக்கு மனதில் "அது ஏன் எல்லா அப்பளமும் உருண்டையாக இருக்கிறது ? சதுரமாக இருந்தால் என்ன ?? " என்று தோன்றியது. நமக்குத்தான் சந்தேகமே ஆகாதே, அப்பளம் போட்டு கொண்டு இருந்தவர்களிடம் கேட்டேன், எல்லோரும் நன்றாக முழித்தார்கள், பல விதமான பதில்கள் வந்தாலும் எனக்கு திருப்தியே வரவில்லை..... ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று மனது சொல்லிக்கொண்டே இருந்தது. அப்போது ஒரு இடத்தில், அப்பளம் அடுக்கி கொண்டு இருந்த பெரியவர், சிரித்துக்கொண்டே "அப்பளம் என்பது மாவினால் செய்தது, பொரிக்கும்போது எல்லா இடமும் சமமாக வேக வேண்டும்.... ஒரு பொருளை சூடு படுத்தும்போது, அது பெரிதாகும். வட்டத்தை தவிர எந்த ஒரு வடிவமும் சமமாக பெரிதாகாது, உதாரணமாக அப்பளம் சதுரமாக இருந்தால் எண்ணையில் போடும்போது ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு பக்கம் பெரிதாகும், அப்போது முனைகள் சமமாக பெரிதாகாததால் உடையும், இதுவே வட்டமாக இருந்தால் எல்லா பக்கமும் சமமாக பொரியும், சுவையாகவும் இருக்கும். அப்பளம் எப்போதுமே வட்டமாகவோ, அல்லது நீள் வட்டமாகவோ இருத்தலே மொறுமொறுப்புக்கு நன்றாக இருக்கும். " என்றார், இதைத்தான் தெர்மல் எக்ஸ்பான்ஷன் என்பார்கள் என்றேன், அன்று அறிவியலும் நமது மூதாதையரின் அறிவும் கண்டு வியந்தேன் !



வட்ட வட்டமாக அப்பளங்கள் வெளியே வரும்போது ஒருவர் பெரிய தட்டில் அதை பிடித்து வைத்துக்கொண்டு இருக்கிறார். ஒரு தட்டு நிறைந்தவுடன், அவர்களின் தாழ்வாரத்தில் வெயில் வரும் இடத்தில் அதை காய வைக்கின்றனர். எங்களது வீட்டில் அப்பளம் என்பது கொஞ்சமாகத்தான் இருக்கும், இங்கோ ஆயிரக்கணக்கான அப்பளங்கள்... அதை பார்க்கும்போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. சாவி எழுதிய வாஷிங்டனில் திருமணம் என்னும் கதையில், இப்படி அப்பளங்கள் காய வைக்கப்பட்டு இருக்கும்போது காற்றடித்ததில் அப்பளங்கள் பறக்கும், அதை அமெரிக்கர்கள் பறக்கும் தட்டு என்று துப்பாக்கி கொண்டு சுடுவார்களாம்... அதை நினைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டு இருந்தபோது அடித்த காற்றுக்கு அப்போது அப்பளங்கள் எதுவும் பறக்காமல் சத்யாகிரஹம் செய்தது ! இப்படி காயவைக்கப்பட்ட அப்பளங்கள், காய்ந்த பின்பு எடுத்து அடுக்கி வைக்கின்றனர். ஒரு சாயாத பைசா கோபுரம் போல அவ்வளவு அழகாக இருக்கிறது.



அவர் அடுக்கி கொண்டு இருக்கும்போதுதான் ஒன்றை கவனித்தேன், விரலை வைத்து அப்பளத்தை அளந்து எடுத்து சரசரவென்று அடுக்க ஆரம்பித்ததை.... புதிதாக இருக்கிறதே என்று என்னவென்று கேட்டேன், அவர் அப்பளம் நம்பரை சரி பார்த்தேன் என்றார். அப்பளத்திற்கு நம்பரா ?! அவரே தெளிவுபடுத்தினார்... அப்பளத்தின் அளவினை இன்ச் கொண்டு சொல்வார்களாம், அதாவது 1 என்றால் ஒரு இன்ச் அளவு கொண்ட அப்பளம், 5 என்றால் ஐந்து இன்ச் அப்பளம் என்று அர்த்தம். பொதுவாக வீட்டிற்கு மூன்று அல்லது நான்காம் நம்பர் அப்பளம் உபயோகிப்பார்களாம், அதுவே கல்யாண வீடு என்றால் ஆறு இன்ச் அப்பளம்..... அப்போ எனக்கு ஒரு நூறு இன்ச் அப்பளம் கிடைக்குமா துரை !!



அப்பளம் வட்ட வடிவில் போட்டு, காய வைத்து, எடுத்து அடுக்கி வைத்துவிட்டார்கள்.... இனி என்ன ? அடுத்து அப்பளங்களை பேக் செய்ய வேண்டியதுதான் ! இப்போது எனது அடுத்த சந்தேகம் என்பது.... அப்பளத்தை எண்ணி அடுக்குவார்களா, அல்லது வெயிட் போட்டா ? ஒவ்வொரு இடத்திலும் அப்பளம் செய்யும்போது கொஞ்சம் திக், அல்லது மெலிதாக, சின்னது, பெரியது என்றெல்லாம் இருக்கும், ஆதலால் முதலில் அந்த அப்பளத்தை நூறு அல்லது ஐநூறு கிராம் எவ்வளவு வருகிறது என்று பார்த்துவிட்டு, அதை போலவே மற்றதை எண்ணி வைக்கின்றனர். உதாரணமாக ஐந்தாம் எண் அப்பளம் 100கி சுமார் 25 அப்பளம் வருகிறது என்று வைத்து கொள்வோம், அடுத்து எல்லா அப்பளங்களையும் 25 ஆக பிரிக்க ஆரம்பிக்கிறார்கள் ! இப்படி ஒவ்வொன்றையும் பிரித்து, சணல் கயிறு கொண்டு காட்டுகின்றனர் !




இப்படி கட்டிய அப்பளத்தை, ஒரு கூடையில் போட்டு பக்கத்தில் ஒருவர் லேபிள் போட்டு கட்டுகிறார், அவரிடம் தள்ளி விடுகின்றனர். அப்பளத்தை எண்ணுபவர்தான் வேகம் என்றால், இங்கு லேபிள் ஓட்டுபவர் இன்னும் வேகமோ வேகம் ! ஒரு ரோபோ போல கைகள் வேகம் வேகமாக ஒரு பேப்பரை எடுக்க, அப்பளத்தை வைக்க, பிறகு நேர்த்தியாக மடிக்க, மைதா மாவு பசை கொண்டு ஒட்ட என்று ஒரு அப்பளம் உருவாகிறது !! அப்பள கட்டினுள் ஒரு வாசனை வருமே, நுகர்ந்து இருக்கின்றீர்களா ? உளுந்தின் வாசமும், பேப்பரின் வாசமும் கலந்து வருமே... அந்த வாசனை அங்கு இப்போது அடித்து கொண்டு இருந்தது, வயிற்றில் பசியையும் தூண்டியது. எனக்கு ஒரு அப்பளம் தர முடியுமா என்று கேட்டு, இவர்கள் வீட்டின் பின்னே ஒரு இடத்தில் முறுக்கும் மற்ற பட்சணங்கள் எல்லாம் போட்டு கொண்டு இருக்க, அங்கே சென்று இந்த ஒரு அப்பளம் பொறித்து தாருங்கள் என்று கூறி.... ஒரு அப்பளத்தின் கதையினை அங்கு பூர்த்தி செய்தேன் ! மொறு மொறுவென சாதத்திற்கு தொட்டு கொள்ளும் அப்பளத்தினை, அன்று சாதம் தொட்டுக்கொண்டு அப்பளத்தினை தின்று கொண்டு இருந்தேன். 








அடுத்த முறை கல்லிடைக்குறிச்சி செல்லும்போது அப்பள வகைகளை அள்ளி வாருங்கள், இதுவரை சில வகை அப்பளங்களை மட்டுமே ருசித்த உங்களுக்கு கட்டாயமாக ஒரு மிக பெரிய அப்பள வகைகளை காணவும், வாங்கவும் முடியும். சாதத்திற்கு சுவையான அப்பளம், மொறு மொறுவென்று.... லைப் ஐஸ் பியூட்டிபுல் !!



Labels : Suresh, Kadalpayananga, Appalam, Kallidaikurichi, Tirunelveli, Papad, Part 2, tasty journey, Oor special, district special

3 comments:

  1. நீங்கள் சொன்ன விதம் [// உளுந்தின் வாசமும், பேப்பரின் வாசமும் கலந்து வருமே... // ] அப்பள வாசனை இங்கே வருகிறது...!!!

    ReplyDelete
  2. தங்களை வலையில் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன நண்பரே

    ReplyDelete
  3. அப்பளம் - எனக்கு அரிசி அப்பளம் பிடித்தது.....

    ReplyDelete