Pages

Monday, January 16, 2017

சிறுபிள்ளையாவோம் - சிரிக்கும் கண்ணாடி !!

பொருட்காட்சி.... சிறு வயதில் இந்த ஒரு வார்த்தையை சொன்னாலே நினைவுக்கு வருவது என்பது பபிள்ஸ், பெரிய அப்பளம், ராட்டினம், பஞ்சு மிட்டாய். இவற்றில் சிலவற்றில் குழந்தைகள் மகிழ்வார்கள், சிலவற்றில் பெரியவர்கள் மகிழ்வார்கள்.... ஆனால், ஒன்றே ஒன்றில் மட்டுமே குழந்தைகளும், பெரியவர்களும் மகிழ்வார்கள்... அது "சிரிக்கும் கண்ணாடி" என்ற இடத்தில்தான். 






இன்று திரையில் விக்ரம் என்னும் நடிகர் உடலை இளைத்து, குண்டாக, முறுக்காக என்றெல்லாம் அதகளம் செய்யும்போது நம்மால் முடியுமா என்று தோன்றும், அதை சிறிதளவும் சிரமம் இல்லாமல் செய்ய வைப்பது என்பது இந்த சிரிக்கும் கண்ணாடியில்தான் ! சிறு வயதில் பொருட்காட்சி சென்று இருந்தபோது ஒரு இடத்தில் இருந்து, "வாங்க சார், உங்களை குட்டையாகவும், நெட்டையாகவும், பருமனாகவும், ஒல்லியாகவும் பார்க்கணுமா ? ஒரு ரூபாயில் இங்க காண்பிக்கிறோம் வாங்க" என்று கூவி கொண்டு இருந்தார்.... ஒரு புறத்தில் உள்ளே என்று எழுதி இருக்க, சிலர் உள்ளே சென்று கொண்டு இருந்தனர், அதில் கொஞ்சம் கூட சிரிக்க மாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்த ஒரு பருமனானவரும் இருந்தார். தூரத்தில் பெரிய அப்பளத்தை உடைத்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தேன், சிறிது நேரத்தில் வெளியே என்று போட்டு இருந்த இடத்தில இருந்து அதே மனிதர் முகத்தில் புன்னகை ததும்ப வருவதை பார்த்ததும்...... இங்கே எனது ஆர்வம் அதிகம் ஆனது !!





அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி உள்ளே சென்றதும், உள்ளே எங்கெங்கும் கண்ணாடிகள் இருந்தது ஆச்சர்யத்தை தந்தது. ஒவ்வொரு கண்ணாடியின் முன்னேயும் நின்று கொண்டு புன்முறுவலும், சிரிப்பும் என்று ஒவ்வொருவரும் செய்துக்கொண்டு இருக்க, இங்கே எனக்கு அப்படி என்ன தெரிகிறது என்று ஆர்வம் அதிகமானது ! ஒரு கண்ணாடியின் முன்னே நின்று கொண்டு பார்த்தபோது நான் மிகவும் குட்டையாக இருந்தேன், அதிர்ச்சியாக என்னை நானே பார்த்துக்கொண்டேன், பல முறை கண்ணாடியையும் என்னையும் பார்த்து முடிவில் இது எதோ சித்து வேலை என்று கூறிக்கொண்டு அடுத்தடுத்த கண்ணாடியை பார்த்து அதில் என்னை பல வகைகளாகவும், தலைகீழாகவும் எல்லாம் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். ஒரு கண்ணாடியில் என்னை நான் மிக உயரமாக பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் !!









இன்றும் பொருட்காட்சிக்கு போகும் போது, கமல் மூன்றாம் பிறையில் குரங்கு போல ஓடி ஆடுவது போல பல வகைகளிலும் கண்ணாடியின் முன் நின்று ஆனந்தம் கொள்வது உண்டு. இன்று இது குவி கண்ணாடி, இது இப்படி என்றெல்லாம் மனதில் வந்து அந்த கண்ணாடியில் அந்த உருவம் அப்படி தெரிவதற்கான உத்தியை மூளை யோசித்துக்கொண்டு இருந்தாலும்.... மனது குழந்தையாக தவ்வி குதிக்கத்தான் செய்கிறது !!







Labels : Sirupillaiyaavom, Childhood memories, memory, exhibition, laughing glass, kadalpayanangal, Suresh

2 comments:

  1. பல வருடமாக எங்கள் மாரியம்மன் திருவிழாவில் இவை இல்லை...

    ReplyDelete
  2. சமீபத்தில் இப்படி ஒரு இடத்தில் என்னை நானே பார்த்து ரசித்துக் கொண்டேன்! :) நல்ல அனுபவம் இது.

    ReplyDelete