Monday, January 30, 2017

அறுசுவை - திருச்சி ரயில்வே ஸ்டேஷன் பிரியாணி !!

கடந்த  வருடங்களாக சுற்றியதில் நிறைய கடைகள் சென்று சாப்பிட்டு, போட்டோ எடுத்து பதிய வேண்டும் என்று நினைத்தாலும் நேரமின்மையால் அப்படியே ஒரு போல்டரில் சேர்த்து வைத்து, வைத்து இன்று எடுத்து பார்த்தால் சுமார் ஐநூறு உணவகங்கள் வரை வந்து விட்டது ! கொல்கத்தா ரசகுல்லாவில் இருந்து, இங்கு நீங்கள் பார்க்க போகும் சிறிய கடை வரை ருசியான தகவல்கள் இருக்கின்றன, இனிமேல் தொடர் பதிவுகளாக போட்டு விட வேண்டியதுதான் !! சரி, திருப்பதிக்கே லட்டு கொடுத்து பார்த்து இருக்கிறீர்களா ? திருச்சியில் பிறந்து வளர்ந்த எனக்கே தெரியாத இந்த சுவையான பிரியாணியை நமது நண்பர் KRP செந்தில் அவர்களும், மெட்ராஸ் பவன் சிவகுமார் அவர்களும் நமக்கு அறிமுகம் செய்தார்கள்... அது ஆகிவிட்டது ஒரு வருடத்திற்கும் மேலாக, ஆனாலும் சுவையான தகவலை காலம் கடந்தேனும் கொடுத்தாக வேண்டியது எனது ஜனநாயக கடமை இல்லையா ?!




திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஒரு நீண்ட பயணத்தில் ஒரு ஜன்னல் ஓர சீட்டில் உட்கார்ந்து, வெயில் சூடு இருக்கும் காற்றில், ட்ரெயினில் விற்றுக்கொண்டு வரும் ஓரளவு வயிற்றை நிரப்பும் உணவை உண்டுக்கொண்டு களைப்புடனும், பசியுடனும் வந்து இறங்கும்போது நல்லா வயிறு நிறைய சாப்பிடணும், அதிகமாக செலவும் ஆகக்கூடாது, ருசியாகவும் இருக்கணும் என்றெல்லாம் சொல்லி யாரிடமாவது கேட்டால் பதில் சொல்வார்களோ இல்லை உங்களை ஏற இறங்க பார்ப்பார்களா... ஆனால், நீங்கள் சொல்லிய எல்லா வகையான கண்டிஷன் பூர்த்தியாவது இந்த திண்டுக்கல் பிரியாணி கடையில்தான். திருச்சி ரயில்வே ஸ்டேஷன் விட்டு வெளியே வரும்போது, சற்றே நடந்து மெயின் ரோட்டிற்கு வந்து உங்களது இடது புறம் திரும்பி சிறிது தூரம் மத்திய வெயிலில் நடந்து சென்றால், ஒரு இடத்தில் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு சப்பு கொட்டிக்கொண்டு சாப்பிட்டு கொண்டு இருந்தால்..... நீங்கள் உங்களது இலக்கை அடைந்து விட்டீர்கள் !







அந்த பெரிய கூட்டத்தில், பசியுடன் நீந்தி கடந்து, அவ்வப்போது நாசியை தாக்கும் அந்த அற்புதமான பிரியாணி வாசனைக்கு எச்சில் விழுங்கி, ஒரு பிரியாணி என்று கேட்க, ஒரு பெரிய பிரியாணி அண்டாவில் இருந்து கரண்டியை கொண்டு ஒரு தட்டு தட்டிவிட்டு, வாழை இலை வைத்து இருக்கும் தட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பிரியாணி அரிசியை வைத்து, நன்றாக வெந்த சிக்கன் பீஸ் கொஞ்சம் மசாலாவுடன் அந்த பிரியாணிக்கு மகுடம் போல வைக்கிறார்கள். எவ்வளவுதான் தட்டில் வைத்தாலும் நமக்கு மனதுக்கு, இன்னும் ஏதோ கொஞ்சம் குறையுதே என்று தோன்றத்தான் செய்யும்... அதை எதிர்நோக்கியது போலவே, சிக்கன் 65 வேண்டுமா என்று கேட்க்கும்போது வேண்டாம் என்று சொல்ல வாய் வருவதில்லை !!






ஒரு தட்டில் பிரியாணியும், சிக்கன் 65ம் ஏந்திக்கொண்டு வெளியே வந்து ஒரு சிரிப்பு சிரித்தார் சிவகுமார், நாங்களும் வெற்றி களிப்புடன் ஒரு வாய் பிரியாணியை எடுத்து வாயில் வைத்தோம் ! பிரியாணியில் பல வகை இருக்கிறது.... ஹைதெராபாத் பிரியாணியில் அரிசி வெள்ளையாக - நீளமாக இருக்கும், ஆம்பூர் பிரியாணியில் அரிசி சிறியதாக இருக்கும், பெங்களூரு சிவாஜி மிலிட்டரி ஹோட்டல் பிரியாணியில் பட்டாணி இருக்கும், திண்டுக்கல் பிரியாணியில் அரிசி உடைந்து இருக்கும் அதனோடு பெப்பர் கலந்து இருக்கும், லக்னோ பிரியாணியில் அரிசி சேமியா போலவே முந்திரியுடன் இருக்கும், கேரளா தளசேரி பிரியாணி வெள்ளையும் - மஞ்சளும் சேர்ந்து அரிசி பொல பொலவென இருக்கும், சிந்தி பிரியாணியில் முந்திரியே அதிகம் இருக்கும்.... இப்படி வகைகள் இருக்கிறது. இங்கே பிரியாணியில் அங்கங்கே கலர் கலர் அரிசி எட்டி பார்க்க, பொல பொலவென நன்கு இருந்தது. ஒவ்வொரு பருக்கையிலும் மசாலா  இருக்க, கொஞ்சம் கத்திரிக்காய் தால்சாவுடன் கறியை எடுத்து வைக்க வைக்க உள்ளே போய் கொண்டே இருந்தது..... சிவகுமார் அமைதியாக இருந்து அப்போதுதான் பார்த்தேன் :-)




அந்த கடையில் இருந்து சற்று தள்ளி இன்னொரு இடத்தில் அண்டா அண்டாவாக பிரியாணி ரெடி ஆகி கொண்டு இருந்தது. மக்களும் கூட்டம் கூட்டமாக உண்டு கொண்டும், பார்சல் வாங்கி கொண்டும் வந்து கொண்டு இருந்தனர். திருச்சி செல்லும்போது சுவையான பிரியாணி வேண்டும் என்றால் கண்டிப்பாக இங்கு செல்லலாம்.... அப்படியே எங்களுக்கும் மனமிருந்தால் ஒரு பார்சல் சொல்லலாம் !!

Labels : Suresh, Kadalpayanangal, Tiruchy, Tiruchirapalli, Railway station, biriyani, tasty

9 comments:

  1. உங்கள் பதிவுகளை வாசிக்கும் போதே பசி அதிகமாகி விடும்...!

    என்னே ரசனை...!

    ReplyDelete
  2. அட சாப்பாட்டு புராணம் நம்ம ஊர்லயிருந்து ஆரம்பிச்சு இருக்கிறீங்களா, அருமை. இனி அமுத சுரபி readyதான்!!!!!
    Value for money என்பார்களே அது இந்த கடைக்குதான் பொருந்தும். மனமும் சுவையும் தூக்கும். பார்சல் எண்ணிக்கையை பார்த்தால் புதியவர்களுக்கு கிரு கிருத்து போகும்.

    ReplyDelete
  3. Is this place near Tiruchi Central Junction which is adjacent to Central Busstand?




    ReplyDelete
    Replies
    1. நண்பரே, திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை விட்டு வெளியில் வந்ததும், இடது பக்க சாலையில் கொஞ்ச தூரம் நடந்ததும் காதிகிராப்ட்டிற்கு எதிரே இருப்பதுதான், இந்த பதிவில் வரும் ’திண்டுக்கல் பிரியாணி’ கடை. இந்த கடையின் வாசலில் அதிக இருசக்கர வாகனங்கள், கார்கள் நிற்பதைக் கொண்டும், நிறையபேர் கைகளில் தட்டுகளை ஏந்தியபடி பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருப்பதை வைத்தும் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

      (இந்தக் கடைக்கு முன்னர், இதே பெயரை வைத்துக் கொண்டு இரண்டு கடைகள் உண்டு. இவைகள் இங்கே பதிவில் சுட்டப்படும் கடை கிடையாது)

      Delete
  4. தலை சூப்பரு போங்க. Waiting for India trip

    ReplyDelete
  5. பார்க்கும்போதே பசிக்குதே...

    ReplyDelete
  6. கடையின் சிறப்பு என்ன என்றால் பிரியாணியில் கறி அதிகம். இது போல் எங்கும் கிடைப்பதாக தெரியவில்லை.

    ReplyDelete