Friday, February 3, 2017

அறுசுவை - தேள் வறுவலும், கருப்பு அரிசி சோறும் !!

என்னதான் நாம தமிழ்நாடு முழுக்க சுற்றி சுவையான உணவு பற்றி எழுதினாலும், அல்லது இந்தியா முழுக்க சுற்றி உணவுகளை பற்றி எழுதினாலும், அமெரிக்கா பர்கர், இத்தாலியன் பாஸ்தா, ஜப்பான் நூடுல்ஸ் என்று அங்கேயே சென்று ருசித்து எழுதினாலும்.... இந்த சமூகம் நம்மையும் ஒரு உணவு ரவுடிதான் என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறது ! நாம சாப்பிடறது எல்லாமே தேவை இல்லாத ஆணிதான் என்று கூறிக்கொண்டு, நீ சீனா போயிருக்கியா, அங்க பாம்பு கறி சாப்பிட்டியா, தேள் சாப்பிட்டு இருக்கியா.... ஆமாம்னு சொல்லு, நாங்க உன்னை உணவு காதலர் அப்படின்னு ஒத்துக்குறோம் அப்படின்னு சொல்றாங்க. அட போங்கடா.... நானும் ரவுடிதான், எல்லாரும் பாத்துக்க நான் இன்னைக்கு இட்லியும் கெட்டி சட்னியும் சாப்பிட்டேன், பார்த்துக்க, பார்த்துக்க என்று வான்டெட் ஆக கூறிக்கொண்டு பதிவுகள் எழுதிக்கொண்டு இருந்தேன்..... ஆனாலும், கடைசியில என்னையும் அரசியல் பண்ணி தேள் வறுவல் சாப்பிட வைச்சிட்டீங்களே.... நியாயமாரே !!







இந்த முறை சீனா செல்கிறேன் என்று தெரிந்தபோதே, சீன உணவுகள் எங்கு கிடைக்கும் என்று பார்த்து வைத்துக்கொண்டேன். இதுவரை 15 முறை சென்று இருக்கிறேன், இதுவரை நாய், பன்றி, பாம்பு, கழுதை, நத்தை, முயல், பல பல வகையான மீன்கள் என்று பலவற்றை தின்று இருந்தாலும், இந்த தேள் மற்றும் மற்ற உயிரினங்களை தின்றது இல்லை. சீனா என்றதுமே அங்கே இந்த விஷ பூச்சிகளை எல்லாம் தின்பார்களே என்று சொல்லி கேட்டு இருக்கிறேன், ஆனால் ஒவ்வொரு முறை செல்லும்போதும் அதை சுவைக்க முயலவில்லை. இந்த முறை பெய்ஜிங் சென்று இருந்தேன், அங்கே இந்த மாதிரி உணவுகள் எங்கே கிடைக்கிறது என்று எல்லோரிடமும் கேட்டபோது கூறிய பதில்...... வாங் பியூ ஜியாங் தெருவுக்கு செல்லுங்கள் என்பதே !!



பெய்ஜிங் நகரத்தின் நடுவே அமைந்த தியான் மென் சதுக்கத்தில் இருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது இந்த தெரு. அலங்கார வளைவுடன் ஆரம்பிக்கும் இந்த சிறிய தெருவின் ஆரம்பம் முதல் முடிவு வரை சீனாவின் எல்லா விதமான பாரம்பரிய உணவுகளும் கிடைக்கிறது. தெருவில் நுழைந்தவுடன் முதல் கடையிலேயே மூன்று சிறிய தேள்களை ஒரு குச்சியில் குத்தி வைத்திருக்கின்றனர், கொஞ்சம் உற்று பார்த்தால் தேள் அசைகிறது..... அட, நன்னாரி பயலுகளா, உசிரோடவா இதை பொரிச்சு தருவீங்க !! சாப்பிடும்போது தொண்டையில் கொட்டிட்டா நான் எப்படிடா அங்க மருந்து போட முடியும் ?!



கருப்பா இருக்கிற அரிசி... சாப்பிடலாம், நல்லா இருக்கு !



என்னதான் வீராவேசமாக தேள் சாப்பிட வேண்டும் என்று கிளம்பினாலும், அந்த தேள் அசைவதை பார்த்தவுடன் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடினேன். அடுத்த கடைகளில் முட்டைகளை போன்று ஒன்று இருந்தது, அது அந்த ஊர் கடலை போல ! இனிமேல் எழுத முடியாது.... டைரக்ட் ஆக்ஷன் தான் !!

அவங்க ஊரு அவியல் போல இருக்கு !

கடலை போல கொரிச்சிக்கிட்டே இருக்காங்க இதை !

இது சாப்பிடற ஒன்றுதான், ஆனால் எந்த மிருகம்னு தெரியலை !


பன் மாதிரி இருக்கே, அப்படின்னு பார்த்தால் உள்ளே பன்றி இறைச்சி ! 

இது மாட்டின் லெக் பீஸ் !!

நைட்ரோஜென் போட்ட கூல் ட்ரிங்க்ஸ்... குடிச்சா புகைதான் எல்லா துவாரத்திலும் !

சீனாவில் பொதுவாகவே உணவை வேக வைத்தே சாப்பிடுகின்றனர். கொஞ்சமே கொஞ்சம் அரிசியை மட்டும் சிறிய கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, நிறைய கறியையும், காய்கறிகளையும் எடுத்து உண்கின்றனர். காரத்திற்கு வினிகரில் கொஞ்சம் சிவப்பு மிளகாய் போட்டு வைத்து இருப்பதை ஒரு வாய் வைத்துக்கொள்கின்றனர். கடல் உணவுகளை மட்டும் சொன்னால் இரு பகுதிகளாக எழுத வேண்டி இருக்கும்.... பிஞ்சு நண்டு, ஆக்டோபஸ், பெரியத்தில் இருந்து சிறிய மீன், சிப்பி என்று எல்லாவற்றையும் ருசித்து சாப்பிடுகின்றனர் !


எல்லாமே மீன்தான்.. ஆனா அதுக்கு பேரு வைக்கலை !!

ஆக்டோபஸ் பொரியல் !

நண்டு பஜ்ஜி !

சீனாவின் பைன் ஆப்பிள் கேசரி ?!

லெக் பீஸ் வேணுமா ?! பீப் லெக்.....

முட்டைல கூட கறி போட்டு இருக்காங்க !

சீனா இட்லி..... டிம் சம் !!

கலர் கலரா ஜெல்லி !

குவா, குவா வாத்து.... பொரிச்சு சாப்பிட ரெடியா !

இனி, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அண்ணன் அவர்கள் தேள் வறுவல் சாப்பிட்டு காண்பிப்பார்கள்.... எல்லோரும் கை தட்டுங்க ! இங்கே நான் மட்டும் இல்லை, உலகத்தின் பல மூலையில் இருந்து வந்த பலரும் சாப்பிட விரும்பியது இதைத்தான். இதை எல்லாம் சாப்பிடுவீங்களா என்று ஆபிசில் இருந்த ஒருவரிடம் கேட்டேன், அதெல்லாம் இல்லை, ஆனால் வேணும்னா சாப்பிடலாம் தப்பில்லை... அப்படின்னு குழப்பிட்டார். பத்து கடை ஏறி இறங்கி, கடைசியா நல்ல வயசுக்கு வந்த தேளா பார்த்து, 32 - 26 - 36 என்று இருந்த ஒன்றை குலசாமி பேரை சொல்லி கொண்டாடா என்று தைரியமாக சொன்னேன் (பாடி ஸ்டராங்..... பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்), அவரும் உயிரோடு இருந்த தேளை அப்படியே எண்ணையில் போட்டு, கொஞ்ச நேரத்தில் எடுத்து போட்டு உப்பும் காரமும் கொஞ்சம் தூவி தந்தார்...... தேள் வறுவல் சாப்பிடலாம் வாரீங்களா !!


கருந்தேள்..... சார், எஸ்சுஸ் மீ !

வண்டுகள் ரெடி..... என்னடா, டிபன் ரெடி மாதிரி சொல்றீங்க !!

 டேய், நாங்க எல்லாம் ஸ்டார் பிஷ் அழகுக்கு மட்டும்னு நினைச்சோம் !

சார், என்னோட சின்ன வயசுல எனக்கு பட்டப்பேரு "தட்டான்" .... என்னையும் பொரிச்சிடாதீங்க !

தேள் வறுவல் கையில் வந்ததில் இருந்து, அதுவும் சிறிது நேரத்திற்கு முன்பு வரை எனது முன் கை, கால்களை அசைத்துக்கொண்டு இருந்த ஒன்றை சாப்பிட போகிறோம் என்றபோது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. முடிவில் மனதை தயார்படுத்திக்கொண்டு ஒரு தேளை வாயில் வைத்து கடித்தேன், எண்ணையில் பொரித்து இருந்ததால் கருக் - மொறுக் என்று இருந்தது. ஒரு இடத்தில மட்டும் சதை கொஞ்சம் மாட்டியது, பின்னர் எல்லாமே மொறு மொறுதான்..... சுவையும் இருந்ததால், அடுத்து இருந்த ரெண்டு தேளுமே சடுதியில் காலியானது. டேய்.... நானும் ரவுடிதாண்டாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடா !!! 





Labels : Suresh, Kadalpayanangal, China foods, Scorpion, snake, Chinese food, World food, China, Global food

ஊர் ஸ்பெஷல் - கீழக்கரை துதல் / தொதல் அல்வா !!

"கிழக்கு கரை" - இந்த பெயரில் பிரபு நடித்து ஒரு படம் வந்தது,  அது கீழக்கரை என்னும் இடத்தை குறிக்கிறது என்றனர், அப்போதுதான் இந்த பெயரே பரிச்சயம். பின்னாளில், அப்பா வேளாங்கண்ணிக்கு கூட்டிக்கொண்டு செல்லும்போது, கீழக்கரை இங்கிருந்து பக்கம் என்று யாரோ சொல்லி கேள்விப்பட்டு, ஓஹோ அது இந்த பக்கம்தான் போல என்று எண்ணிக்கொண்டேன். ஊர் ஸ்பெஷல் என்று பட்டியல் போடும்போது, இந்த கீழக்கரை பெயரின் எதிரில் துதல் அல்வா என்று எழுதினேன், கோதுமை அல்வா, திருநெல்வேலி அல்வா கேள்விப்பட்டு இருக்கிறேன், அது என்ன துதல் அல்வா, எப்படி இருக்கும், என்ன கலர் என்று பல கேள்விகள் மனதில். எனது முஸ்லீம் நண்பர் ஒருவரிடம், அது என்னங்க துதல் அல்வா என்று கேட்டு முடித்ததுதான் தாமதம், எச்சில் விழுங்கிக்கொண்டே அட எங்க என்று கேட்டு, சும்மாதான் கேட்கிறேன் என்றவுடன் ஏமாற்றத்துடன், அட அந்த அல்வா சுவையே வேற என்று நினைவுகளில் மூழ்கினார் ! அப்படி என்னதான் சுவை என்று நாமளும் பார்க்க வேண்டாமா..... எடுங்க வண்டியை !!  







கீழக்கரை (ஆங்கிலம்:Kilakarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம்இராமநாதபுரம் வட்டம்திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். கீழக்கரை வரலாற்றுச் சிறப்பு மிக்கக் கடற்கரைப்பட்டினமாகும். இது மன்னார் வளைகுடாவில் அமைந்து உள்ளது. இது பல பெயர்களில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.... கொற்கை, கீழச் செம்பி நாடு, பொளத்திர மாணிக்க பட்டனம், நினைத்தான் முடித்தான் பட்டினம், லெப்பாட் பட்டினம், கிழுவை என்றெல்லாம் சொல்லி இன்று கீழக்கரை என்றுள்ளது.  கிழுவைநாடு என்பது கிழக்கு கடற்க்கரை பிரதேசமான ஊர் என்று அர்த்தம்.. கிழக்கு கடற்கரை என்ற வார்த்தை தான் கிழுவை என்று பொருள் தருகிறது. இராமநாதபுரம் பகுதி சேது என்றும் பாண்டியனின் கிழக்கு பிரதேசமான கீழக்கரை கிழுவை நாடு என்று அழைக்கபட்டது. புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு மன்னராக விஜயரகுனாத தொண்டைமானை பதவியில் அமர்த்திய கள்ளர் குல அரசன் கிழவன் சேதுபதி ஆண்ட சேது சீமையின் பிரதான துறை முகத்தினை பற்றியும் , இந்த திருப்புல்லானி ஆலயத்தில் இருக்கும் 800 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் காணப்படும் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் ‘கீழச் செம்பி நாட்டுப் பவுத்திர மாணிக்கப் பட்டணத்துக்கு, (கீழக்கரைக்கு) கீழ்பால் சோனகச் சாமந்த பள்ளிக்கு (ஏர்வாடி தர்ஹா) இறையிலிவரி விலக்குடன் மானியம் ஆகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் என்று பல பெருமைகள் இந்த ஊருக்கு உண்டு !

குறிப்பு : நமது ஊர்களின் பெயர்களையும், பெயர் காரணங்களையும் யோசித்து பார்த்ததுண்டா ?! பட்டி என்று முடியும் ஊர்கள், குறிச்சி என்று முடியும் ஊர்கள், கரை என்று முடியும் ஊர்கள்.... என்று ஒவ்வொரு ஊரின் முதல் வார்த்தையும், கடைசி வார்த்தையும் உங்களுக்கு அந்த ஊரின் ஜாதகத்தையே சொல்லும். இந்த முறை கீழக்கரை சென்று இருந்தபோது, அதை விலாவரியாக விளக்கினார் ஒரு பெரியவர்...... அதை தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....ஊரும் பெயர் காரணங்களும் !!







இக்கடற்கரைப்பட்டினத்திற்கு நேரெதிராக அப்பா தீவும், தென் மேற்கே பாலைய முனைத் தீவும், ஆனைத்தீவும், நல்லதண்ணீர்த் தீவு, சுள்ளித் தீவு, உப்புத் தண்ணீர்த் தீவுகளும், தென்கிழக்கே, தளரித் தீவும், முல்லைத் தீவும் அமைந்துள்ளன. கீழக்கரையின் மேற்கே சின்ன ஏர்வாடியில் இருந்து கிழக்கே சேது கரை வரையுள்ள பகுதிகளில், பார்கள் சூழ்ந்து உள்ளது. இப்பகுதியில் பார்களுக்குள்ளே ஒரிடத்தில் மட்டும் சுமார் 150 பாகம் (fathoms) அகலமுள்ள ஆழமான இடைவெளிப் பாதை அமைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்க இயற்கை அமைப்பாகும். இங்குள்ள பார்களில் சங்கு, முத்துச்சிப்பி, வண்ணமீன்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் உற்பத்தியாவதற்கு ஏற்ற இயற்கைச் சூழல் அமைந்துள்ளது. உப்புத் தண்ணீர்த் தீவுக்கு அருகாமையிலும், நல்லதண்ணீர்த் தீவுக்கும், ஆனைத்தீவுக்கும் இடையிலேயும் முத்துச்சிப்பிகள் கிடைக்கும் படுகைகள் அமைந்துள்ளன.   


ராமநாதபுரம் பகுதியில் இருந்து கீழக்கரை செல்லும் ரோடு நன்றாக இருந்தாலும், சிறிய ரோடுதான். கீழக்கரை என்று ஒரு போர்டு வந்தவுடன், ராவியத் இனிப்பு கடை எங்கு என்று தேட வேண்டுமே என்றபோதே இரண்டு பேர் ஊர் எல்லையில் நம்மை மறிக்கிறார்கள், ஊரினுள் செல்ல நகராட்சி கட்டணம் என்று வாங்கிக்கொண்டு இருக்கும்போதே, இங்க ராவியத் கடை என்று கேட்க, நேரா போய்கிட்டே இருங்க, மசூதிக்கு அப்புறம் கொஞ்ச தூரத்தில் உங்களுக்கு வலது பக்கம் என்றனர். மிகவும் குறுகலான தெருவில், இரு பக்க டிராபிக் இருக்க, சாலை இருபக்கத்திலும் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்க, அதை தாண்டி நமது மக்கள் நடந்து செல்ல என்று ஒரு காரினில் சென்றால்..... கொஞ்சம் கடினம்தான் ! இருந்தாலும் அந்த துதல் அல்வாவின் சுவைக்காக எதையும் பொறுக்கலாம் தான்.... அவ்வளவு சுவை !!


இலங்கை இஸ்லாமியர்களின் சமையலில் இடம்பெறும் இனிப்பு வகை உணவுகளில் தொதல் மிகவும் முக்கியமான உணவு. இது பச்சரிசி, தேங்காய், சீனி, முந்திரி, ஏலக்காய் உட்பட்ட பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இப்பலகாரம் சர்க்கரைக் கழி என்று அழைக்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் குறிப்பாக கீழக்கரை, மரைக்காயர் பட்டிணம், காயல்பட்டிணம், அதிராமப்பட்டிணம் ஆகிய ஊர்களில் வாழும் இஸ்லாமியர்கள் வர்த்தக ரீதியாக இலங்கைக்குச் சென்று வந்ததன் வழியாக அங்கு இருந்த பலவகையான உணவு வகைகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. அதில் துதல் / தொதல் முக்கியமான பண்டமாகும். (இதை சிலர் துதல் என்றும், தொதல் என்றும் அழைக்கின்றனர். ராவியத் இனிப்பகத்தில் இதை துதல் என்றே அழைக்க வேண்டும், அதுவே சரி என்றனர்.... ஆகவே, நமக்கு இனி துதல் !!) இன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சுற்றி தென்னந்தோப்புகள் அதிகம். இதனால் கீழக்கரையில் 50க்கும் மேற்பட்டவர்கள் குடிசைத் தொழிலாகத் தொதலை செய்து சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். இங்குச் செய்யப்படும் தொதல் ஒரு மாதம் ஆனாலும் கெடாமல் இருக்கிறது. ஒரு கிலோ தொதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.. 250 வரையிலும் விற்கப்படுகின்றது.


ஒரு மசூதி தாண்டி சென்றவுடன், உங்களுக்கு வலது பக்கம் தெரிகிறது அந்த சுவையான எழுத்துக்கள்.... ராவியத் ஸ்வீட் பேலஸ் ! நாங்கள் சென்றது காலை 10 மணிக்கு, துதல் அல்வா இருக்கா என்றவுடன், இல்லை அது வருவதற்கு 12 மணி ஆகும் என்றனர். நாங்கள் வெளியூரில் இருந்து, துதல் அல்வா சாப்பிடவே வந்திருக்கிறோம் என்று கெஞ்சி கூத்தாடவும், அவர் போன் செய்து பேசிவிட்டு, சரி இருங்க இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துடும் என்றனர்.... "பார்த்த விழி, பார்த்தபடி பூத்து இருக்க....." !! ஸ்வீட் கடை, சுற்றி பார்க்க அங்கே இருந்த பலகாரங்கள் ஒன்று கூட இதுவரை நான் எங்கும் கண்டதில்லை, என்ன இது என்று கேட்க கேட்க.... ஒவ்வொன்றையும் விளக்கினார். எல்லாமுமே வீட்டில் செய்யும் பலகாரங்கள், இன்று வீட்டில் இதை செய்வதற்கு நேரம் இல்லை என்பதால் இங்கு வீடுகளில் செய்து, கடைக்கு போட்டு விற்கின்றனர். இவ்வளவு வீட்டு பலகாரங்களா என்று அதிசயப்பட... கீழக்கரைகாரங்களை எல்லோரும் தின்னே தீர்க்கும் பரம்பரை என்பார்கள் என்று பெருமையாக சொன்னார், எஸ்சுஸ் மீ, நாங்களும் உங்க தூரத்து சொந்தம்தான் என்றோம், மனதுக்குள் !!






கடல்பயணங்கள், ஸ்வீட் கடை, வீட்டில் செய்த பலகாரங்கள், நம்ம மூக்கு, வாசனை...... இனியும் சொல்லனுமா, ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும், ஒவ்வொரு பாக்கெட் பிரிக்கப்பட்டது, அது இரண்டு நிமிடங்களில் காலி செய்யப்பட்டு, மீண்டும் அடுத்த ஆட்டம் தொடங்கியது.... ஹலோ, துதல் அல்வா செய்றவங்களா..... எப்போ சார், துதல் கொண்டு வருவீங்க.... !! ஒரு ஆட்டோ வந்தது, இரண்டு தூக்கு சட்டிகள், சில பல குட்டி சட்டிகள், பெட்டிகள் என்று வந்து இறங்கியது. எனது நண்பன், மீண்டும் முதல்ல இருந்தா என்று முழித்தான்.... நம்ம ஊரு கருப்பசாமி காப்பாத்துவார், ரெடி ஸ்டார்ட் என்றேன் !! முதலில் அல்வாவை பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும்.... ஆரஞ்சு கலரோ, அரப்பு கலரோ, மேல நெய் மிதந்தே ஆகும், கையில் எடுக்கும்போதே தலபுல தலபுல என்று ஆடும், வாயில் வைக்கும்போது எனக்கும் நாக்குக்கும் சம்பந்தம் இல்லை, நாங்க பகையாளி என்று உள்ளே வயிற்றுக்கு ஓடும். இதுவரை அப்படித்தானே எல்லாம்.... ஆனால், இங்கு துதல் அல்வா தூக்கு சட்டியை திறக்கும்போது, கருப்பு திராட்சையை கூழ் செய்து வைத்தது போல அவ்வளவு கருப்பு, அதன் மேலே திறக்கும்போது கடையில் கரண்ட் இல்லாமல் கம்மியான வெளிச்சத்தில் தூக்கு சட்டியினை எட்டி பார்த்தால் அல்வா இல்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று முந்திரியை தூவி அல்வாவின் இருப்பை உறுதி செய்து இருந்தனர். "ஏங்க, இதுதான் துதல் அல்வாவா.... உண்மையாத்தான் சொல்றீங்களா ?!" என்று கேட்டுக்கொண்டே அந்த சுவையான வாசனையை முகர்ந்தேன் !!




நமக்கெல்லாம் வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சிவப்பா இருந்தாதான் சுவையா இருக்கும் என்று நம்ப வைத்துவிட்டார்கள். சாப்பிடுவது எல்லாம் நினைத்து பார்த்தால்.... வெள்ளை இட்லி, பொன்னிறமான தோசை, சிவப்பான தக்காளி சட்னி, கோதுமை பூரி, ஆரஞ்சு நிற கேசரி, மஞ்சள் நிற மிக்சர், வெள்ளையான ரசகுல்லா, பிரவுன் கலர் குலோப்ஜாமூன் என்று எல்லாவற்றையும் சிவப்பு கலர் வரிசையில் தந்து விட்டதால் உளுந்தம் களி உருண்டையும், ராகி உருண்டையும், இந்த துதல் அல்வாவும் கொஞ்சம் கருப்பு கலரில் இருப்பதால் நமக்கு மனதுக்கு அந்நியப்படுகிறதோ ! சாப்பிடலாமா, நன்றாக இருக்குமா என்றெல்லாம் யோசிக்க யோசிக்க... ஒரு சின்ன பேப்பரில் கொஞ்சம் துதல் அல்வா எடுத்து நம்மிடம் நீட்டுகிறார். ஒரு சின்ன விள்ளல் எடுத்து, வாயில் போட்டவுடன்.... சாப்பிடும் சாப்பாட்டில் கூட கலர் பார்க்கின்றோமே என்று கொஞ்சம் குற்ற உணர்வு தோன்றுவது உறுதி. பச்சரிசியும், தேங்காயும் செய்யும் சுவை ஜாலம் அலாதி எனலாம். கோதுமை அல்வாவினை விட இந்த அல்வா சுவையில் சூப்பர் !! கொஞ்சம் கொஞ்சமாக துதல் அல்வா நம்மை ஆக்கிரமிக்க, நாம் சந்தோஷமாக சரணடைகிறோம் !!




செய்முறை
  • பச்சரிசி 1 கோப்பை, 5 தேங்காய், சர்க்கரை 1 கிலோ, பனை வெல்லம் 250 கிராம், 4 மேசைக் கரண்டி ஜவ்வரிசி (அல்லது அதே அளவு வறுத்த பாசிப்பருப்பு) ஏலக்காய் தேவையான அளவு பச்சரிசியை ஊறவைத்து இடித்து அரித்து மாவாக எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி அதன் பாலைத் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் அகன்ற சட்டியில் பச்சரிசி மாவு, தேங்காய்ப் பால் (6 டம்ளர்), சீனி, பனை வெள்ளம், பாசிப்பருப்பு இவற்றை ஒன்றாக ஊற்றி இரண்டு மணி நேரம் கிளர வேண்டும்.
  • பின்னர் 2 டம்ளர் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கலவை திரண்டு அல்வா போன்ற வடிவம் வரும் வரையிலும் கிண்ட வேண்டும். பின்னர் ஏலக்காயைப் பொடியாக்கித் தூவ வேண்டும். பின்னர் தேவைப்பட்டால் முந்திரிப் பருப்பை மேலே தூவலாம்.
  • அல்வா வடிவத்தில் கையில் ஒட்டாத பதம் வந்ததும் சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். நன்றாக ஆறிய பின்னர் கேக்குகள் போன்று வெட்டிப் பரிமாறலாம்.


அடுத்த முறை அந்த பக்கம் செல்லும்போது, துதல் அல்வா மட்டும் அல்ல, பணியம், மைசூர் பாக்கு, கலகலா, அடை, கொழுக்கட்டை என்று வீட்டு பலகாரங்கள் எல்லாம் சுவைக்க வாங்கி வரலாம். இந்த துரித யுகத்தில், பன்னாட்டு மோகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் உயிர் வாழுமோ இந்த துதல் அல்வா !!



Raviath Sweets
Sweets and Dessert Buffet
Address18/127 V.s., Madhihur Rasool Salai Rd, Kilakarai, Tamil Nadu 623517
Phone099423 20350


Labels : Kadalpayanangal, Suresh, Oor special, District special, Oorum rusiyum, Keelakarai, Kilakarai, Thuthal alva, Thuthal Alwa, Thothal Alva