Wednesday, July 12, 2017

ஊர் ஸ்பெஷல் - ஊட்டி வர்க்கி !! (பகுதி - 1)

ஊட்டி என்று சொன்னாலே, உடம்பின் உள்ளே ஒரு சிலிர்ப்பு ஓடுவதை  தடுக்க முடியாது. சிறு வயதில் எனக்கு தெரிந்தது எல்லாம் பிஸ்கட் மட்டுமே, அதுவும் பிரிட்டானியாவின் மில்க் பிக்கிஸ் பிஸ்கட் என்பது மிகவும் சுவையாக இருக்கும், ஒரு நாள் என் அப்பா அவரது நண்பர் ஊட்டி சுற்றுலா சென்று இருந்ததாகவும், வர்க்கி வாங்கி வந்து இருந்தார் என்று எனக்கு ஒன்று கொடுத்தார். எனது கைகளுக்குள் அடங்கும் அளவுக்கு இருந்த அதை, எதை தொட்டுக்கொண்டு சாப்பிடுவது என்று யோசிக்கும்போது, அதுவும் பிஸ்கட் போலத்தான் என்று சாப்பிட சொன்னார். ஒரு கடியிலேயே அது பிஸ்கட் போன்று இல்லாமல் ஒரு தனி சுவையுடன் இருந்ததை உணர முடிந்தது.... இன்று ஊட்டி சென்று வர்க்கி வாங்கி சுவைத்தபோது, சிறுவயதில் உணர்ந்ததை உணர முடிந்தது, வர்க்கிக்கு மட்டும் வயதாவதில்லை போலும் !!ஊட்டி, மலைகளின் அரசி, நீலகிரி மலைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாம் ஊட்டி என்று அழைத்து பழகிவிட்டாலும் ஊட்டிக்கு அரசாங்கம் வைத்த பெயர் உதகமண்டலம்.  கடல் மட்டத்தில் இருந்து 2286 மீ அதாவது 7500 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஊட்டி. நீலகிரி மாவட்டத்தின் தலைநகராகவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் இடமாகவும் ஊட்டி விளங்குகிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் சங்கமிக்கும் இடத்தில் ஊட்டி என்ற உதகமண்டலம் அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் பையோஸ்பியர்(biosphere) நீலகிரி.  இது கடல் மட்டத்திலிருந்து 7347 அடி (2239 மீ) உயரத்தில் உள்ளதால் குளுமையாக உள்ளது. 12-ஆம் நூற்றாண்டில் நீலகிரி மலையில் ஹொய்சாளர்களின் ஆட்சி புரிந்தனர். பின்னர், திப்பு சுல்தானின், மைசூர் அரசுப் பகுதி ஆன உதகமண்டலம் 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் கைக்கு மாறியது. அப்போது கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஆளுனராக இருந்த ஜான் சல்லிவன் என்பவர், இப்பகுதியின் குளுமையான தட்பவெட்ப நிலையை விரும்பி இங்கிருந்த தோடர், இரும்பா, படுகர் முதலிய பழங்குடியினரிடம் இருந்து நிலங்களை வாங்கினார். ஆங்கிலேயரின் ஆட்சியில் இம்மலைப் பிரதேசம் நல்ல வளர்ச்சியைக் கண்டது. வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளும், நீலகிரி மலை இரயில் பாதையும் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக உதகை, ஆங்கிலேயருக்கு கோடைக்காலத் தலைநகரமாக விளங்கியது.  உதகம் என்றால் தண்ணீர், மண்டலம் என்றால் வட்ட வடிவில் அமைந்துள்ள தண்ணீர்.  எனவே உதகமண்டலம் என்பது அங்கிருக்கும் ஏராளமான ஏரிகளை குறிக்கிறது.  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒட்டெகமண்ட் எனவும் அழைக்கப்பட்டது. அதுவே சுருங்கி ஊட்டி என்றானது.  வர்க்கி..... வருக்கி..... வறுக்கி..... இதை எப்படி எழுதுவது என்பது தெரியவில்லை. பேசும்போது மேலே சொன்ன வார்த்தைகள் எல்லாமே ஒன்று போலவே ஒலித்தாலும், இன்றுவரை இதை எழுதுவது ஆள் ஆளுக்கு மாறுபடுகிறது என்பதுதான் உண்மை ! இந்த வர்க்கி என்பது ஒரு சிறிய பொட்டலம் போன்று காணப்பட்டாலும், அது உள்ளுக்குள் பல பல அடுக்குகளை கொண்டு இருக்கிறது. அதன் கதையை பல பல பேக்கரிகளில் கேட்டாலும் "நதி மூலம், ரிஷி மூலம்" எல்லாம் ஏன் பார்க்கறீங்க, அந்த காலத்தில் இருந்து இது பேமஸ் அவ்வளவுதான் என்பதே பதிலாக இருந்தது. இருந்தாலும் நோண்டுவது நமது பழக்கம் என்பதால்.... வர்க்கி என்பது குக்கீஸ் ஜாதியை சேர்ந்தது. இருங்க, அது எப்படி குக்கீஸ் என்று சொல்றீங்க, அது பிஸ்கட் போன்று அல்லவா இருக்கும், என்று கேட்பவர்கள் முதலில் இந்த பிஸ்கட் மற்றும் குக்கீஸ் பெயர் காரணம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். வர்க்கி எதனால் குக்கீஸ் இனத்திற்குள் வந்தது ?குக்கீஸ் என்று கேள்விப்பட்டதுண்டா ? வெளிநாடு செல்லும்போதெல்லாம், தங்கி இருக்கும் ஹோட்டல்களில் டீ சாப்பிடும்போது கொறிக்க சில பிஸ்கட் வைப்பார்கள், ஒரு முறை நன்றாக இருக்கிறதே என்று இன்னும் இரண்டு பிஸ்கட் கிடைக்குமா என்று கேட்டேன், அவர்கள் முழித்த முழியில், இதற்க்கு முன்னே சாப்பிட்டது ஒருவேளை மாடு போட்ட முட்டையோ என்று சந்தேகம் வந்தது. பின்னர் நான் விளக்கிய விளக்களில், அதன் பெயர் குக்கீஸ் என்று தெரிய வந்தது..... ஏண்டாப்பா, எங்க ஊர்ல எல்லாம் இதை பிஸ்கட் அப்படின்னுதானே சொல்லுவாங்க ?!  அப்போ.... குக்கீஸ் அப்படின்னா என்ன ? பிஸ்கட் என்றால் என்ன ? அது எல்லாம் இருக்கட்டும்... ரஸ்க் என்பது பிஸ்கட் அல்லது குக்கீஸ் இனத்தை சேர்ந்ததா ?!


பிஸ்கட் என்ற ஆங்கிலச் சொல் பெஸ்கட் என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து உருவானது. இதன் மூலச் சொல் லத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டது என்கிறார்கள். லத்தீனில் பிஸ்க் கோட்டாமா என்றால் இருமுறை சுட்டது என்று பொருள். அதிலிருந்தே பிஸ்கட் உருவாகியிருக்கிறது. அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குக்கீஸ் என்றும் மற்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் பிஸ்கட் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்காட்லாந்தில் குக்கீ என்றால் 'பன்னை மட்டுமே குறிக்கும் என்கிறார்கள். பிஸ்கட் தயாரிப்பின் வரலாறு ரோமில் தொடங்குகிறது. கோதுமையில் செய்த சிறிய துண்டுகளான ரொட்டியை தேனில் தொட்டுச் சாப்பிடும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது. அந்த நாட்களில் பிஸ்கட்டுகளில் இனிப்பு சேர்க்கப்படவில்லை. விற்பனைப் பொருளாக மாறவும் இல்லை. வீட்டில் மட்டுமே பிஸ்கட்டுகள் தயாரிக்கப்பட்டன. 16-ம் நூற்றாண்டில்தான் பிஸ்கட், விற்பனைப் பொருளாக மாறியது.அதன் பிறகு கடற்படை வீரர்களுக்கான உணவாக பிஸ்கட் மாறியது, கடற்பயணத்தில் கெட்டுப்போகாத உணவுப் பொருளாக பிஸ்கட் இருந்ததே இதற்கான முக்கியக் காரணம். ஆனால், அந்த பிஸ்கட்டுகள் இன்று நாம் சாப்பிடுவது போல மிருதுவாக இல்லை. கடினமான பிஸ்கட்டுகளுக்கு பதிலாக இனிப்பும் முட்டையும் சேர்த்து மிருதுவான பிஸ்கட்டுகளைத் தயாரிப்பதில் பெர்சியர்கள் அக்கறை காட்டினார்கள். அதன் காரணமாகப் புதிய வகை மென் பிஸ்கட்டுகள் தயாரிப்பது தொடங்கியது. 15 மற்றும் 16-ம் நூற்றாண்டுகளில் துறவிகள் தங்களின் உணவாக பிஸ்கட்டை வைத்திருந்தார்கள். துறவிகளுக்காகவே விஷேசமான பிஸ்கட்டுகள் மடாலயங்களில் தயாரிக்கப்பட்டன. அதை விரத நாட்களில் பயன்படுத்தி வந்தார்கள். 


1595-ல் டீபோல் என்ற ஆர்மீனியத் துறவி ஒருவர் தனது விரத நாட்களில் சாப்பிட்ட பிஸ்கட் பற்றி எழுதியிருக்கிறார். 17-ம் நூற்றாண்டில் யூதர்களால் உருவாக்கப்பட்ட ஜோடன் கேக் என்ற குக்கீ யூத துறவிகளின் விருப்ப உணவாக இருந்தது. தொழில் புரட்சியின் வழியாக ஈஸ்ட் தயாரிப்பு எளிதானது. பிஸ்கட்டை எம்போஸ் செய்யவும் விரும்பிய வடிவத்தில் வெட்டுவதற்கும் உரிய இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. தாமஸ் விகர்ஸ் என்பவர் இந்த இயந்திரங்களை உருவாக்கினார். புதிய இயந்திரங்களின் வருகையால் பிஸ்கட் செய்வது தனித் தொழிலாக வளர ஆரம்பித்தது. அதற்கான சந்தை உருவானது. ஆகவே, பிஸ்கட்டுகளை எளிய மக்களும் வாங்கி உண்ணத் தொடங்கினார்கள். டீயில் பிஸ்கட்டை முக்கிச் சாப்பிடும் பழக்கம் இங்கிலாந்தில்தான் பிரபலமானது. 19-ம் நூற்றாண்டில் உழைக்கும் மக்களே டீயில் பிஸ்கட்டை ஊறவைத்து சாப்பிட்டு வந்தார்கள். ஆகவே, அதை பிரபுக்கள் மோசமான பழக்கம் என ஒதுக்கி வைத்தார்கள். பணக்கார விருந்தில் டீயில் பிஸ்கட் முக்கி சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், டீயில் ஊறிய பிஸ்கட்டின் சுவை பலருக்கும் பிடித்திருக்கவே, அது அனைவருக்குமான பழக்கமாக உருமாறியது. இதற்காகவே விசேஷ பிஸ்கட்டுகள் தயாரிக்கப்பட்டன. அப்படி அறிமுகமானதே ரஸ்க். இது போர்த்துகீசிய சொல்லான ரோஸ்காவில் இருந்து உருவானது. இந்தியாவிலும் பிரிட்டிஷ் மூலமாகவே ரஸ்க் அறிமுகமானது.இப்போ புரிஞ்சதா..... மீசை இருந்தா இந்திரன், மீசை இல்லைனா சந்திரன் !! அது போலவே மொறு மொறுன்னு இருந்தால் பிஸ்கட், கொஞ்சம் பதமாக இருந்தால் குக்கீஸ். அப்போ நம்ம வர்க்கி... குக்கீஸ் அப்படின்னு ஒதுக்கிறீங்களா ?! அது எப்படி, குக்கீஸ் என்பது பிஸ்கட் போலவே தட்டையாக இருக்கும், ஆனால் இது பப்ஸ் போலவே இருக்கிறதே எப்படி என்றால்.... அது நம் மண்ணின் மைந்தர்கள் செய்த வேலை. ஆங்கிலேயர்களின் பிரதான நொறுக்கு தீனியான, 'குக்கீஸ்' (பிஸ்கட்) அவர்கள் காலத்தில் தான் தமிழகத்தில் அறிமுகமானது. காலையில், நீலகிரியின் மணம் கமழும் தேநீரோடு, சில, பல குக்கிகளை விழுங்குவது, அவர்களது வழக்கம். அவர்களிடம் பணியாற்றிய சில சமையல்காரர்கள், பிஸ்கட்டை அடிப்படையாக வைத்து, புதுச்சுவையில் தயாரித்தது தான் வர்க்கி!அது சரிங்க, பிஸ்கட், குக்கீஸ் பெயர் காரணம் எல்லாம் ஓகே, ஆனால் இதற்க்கு வர்க்கி என்று எப்படி பெயர் வந்தது.... 'மொறு மொறு'வென்று இருந்த அதன் புதுச்சுவை, ஆங்கிலேயர்களுக்கு பிடித்துப் போக, இன்று, ஊட்டியின் அடையாளங்களில் ஒன்றாக உயர்ந்து விட்டது, வர்க்கி! காய்ந்த நிலையில் இருக்கும் பொருளை, வறட்டி என்போம். 'வற வற' என இருந்ததால், 'வறக்கிஸ்' என சொல்லப்பட்டு, பின்னாளில், 'வர்க்கி' என்று மருவியது. நெய்யில் வறுத்து தயாரிக்கப்பட்டதால், இப்பெயர் உண்டானதாகவும் சொல்கின்றனர்.

வர்க்கி என்பதன் பெயர் காரணத்திற்க்கே இவ்வளவு நீளமான பதிவாகிவிட்டது... அதன் தயாரிப்பு, சுவை, எங்கு கிடைக்கும், எப்படி செய்வது என்பதை எல்லாம் அடுத்த பதிவில் பார்ப்போமா !! 

 Labels : Suresh, Kadalpayanangal, Ooty, Udagamandalam, Varkey, Varukki, Varki, Indian bakery, famous for, famous ooty varkey

8 comments:

 1. ஒட்டெகமண்ட் - இப்போது தான் அறிந்தேன்...!

  விளக்கங்கள் அனைத்தும் அசத்தல்...

  ReplyDelete
 2. Super Suresh, Welcome Back... !

  ReplyDelete
 3. Amazing narration. Awaiting your further information

  ReplyDelete
 4. Revenge on 30 unanswered calls is accomplished...

  ReplyDelete