Wednesday, July 12, 2017

அறுசுவை - விசாலம் "கஞ்சா" காபி, மதுரை !

மதுரை மக்களுக்கு கொண்டாட்டமான பல உணவுகள் இருக்கின்றன, சூரியன் உதித்ததில் தொடங்கி அடுத்து உதிக்கும் வரை மதுரையை சுற்றி வந்தால் கணக்கில் அடங்காத உணவுகள் இருக்கின்றன. இட்லி - குடல் குழம்பு, பிரியாணி, ஆறுமுகம் பரோட்டாவும் - சால்னாவும், ஜிகர்தண்டா, இளநீர் சர்பத், அயிரை மீன் குழம்பு, நண்டு ஆம்பிளேட், முட்டை இட்லி, பர்மா கடை இடியப்பம், மட்டன் சுக்கா... என்று அடுக்கிக்கொண்டே போகலாம் ! என்ன இருந்தாலும், நண்பர்களுடன் செல்லும்போது ஒரு டீ அல்லது காபி குடித்துக்கொண்டே பேசும் சுகம் இருக்கிறதே, அது மூக்கு முட்ட சாப்பிட்டாலும் வராது. மதுரையின் ஸ்பெஷல் எனப்படும் "கஞ்சா" காபி என்பது நியூ விசாலம்ஸ் என்னும் கடையில் கிடைக்கிறது... அது ஒரு ஏகாந்த சுவை !!மதுரையின் பிஸியான இடம் என்பது தமுக்கம் மைதானம். ஒரு பக்கம் புகழ் பெற்ற அமெரிக்கன் காலேஜ், இன்னொரு பக்கம் காந்தி மியூசியம், அடுத்து அம்மா மெஸ் என்று ஆட்கள் நிரம்பி வழியும் ஒரு இடத்தில், காலையில் இருந்து மாலை வரை கூட்டம் நிரம்பி தள்ளும் ஒரு இடம் என்பது இந்த நியூ விசாலம்ஸ் காபி கடை. ஒரு சிறிய இடம்தான், அங்கு நடக்கும் வியாபாரமே சொல்லும் அந்த கடையின் ஸ்பெஷல் என்ன என்பதை ! கடையின் விலாசம் என்பது அம்மா மெஸ் எதிரில் என்று சுருக்க சொல்லலாம்.ஒரு நாள் மாலை பொழுதினில், தலையை லைட் ஆக வலிக்க ஆரம்பிக்க, ஒரு டீ சாப்பிடலாமா என்று கேட்க, நண்பர்களோ பக்கத்தில்தான் ஒரு காபி கடை அங்கு செல்லலாமே என்று ஒருமித்து சொல்ல.... அவர்களது முகத்தில் தெரிந்த அந்த சந்தோசமே, அங்கு செல்ல வேண்டும் என்று தூண்டியது. செல்லும் வழியில் அவர்கள் அந்த காபியின் சுவை பற்றி சிலாகித்து சொல்ல, எனக்கு இங்கே மனதில் ஒரு பெரிய கடை, காபி கொண்டு வருபவர்கள், கடையின் உள்ளலங்காரம் என்று ஒரு பிம்பம் உருவாகி கொண்டு வந்தது. முடிவில் வண்டியை நிறுத்தி ஒரு தெரு முனையின் கடையை காட்டி, காபி சாப்பிடலாம் என்று சொன்னவுடன்.... இதுவா கடை என்று ஆச்சர்யம் ஆனது !மிக சிறிய கடை, அங்கு சூடாக போண்டா, பஜ்ஜி என்று தின்று கொண்டு இருக்க, நண்பர் ஒருவர் ஒரு சூடான மெது வடையை குருமாவில் முக்கி எடுத்து வந்தார். சும்மா சொல்லக்கூடாது, இதுவரை மெது வடைக்கு தேங்காய் சட்னிதான் மிக சிறந்த நண்பன் என்று இருந்ததை, ஒரு விள்ளல் எடுத்து அந்த குருமாவில் முக்கி வாயில் போட்டவுடன், எண்ணத்தை மாற்றி கொள்ள தோன்றியது. மிதமான காரத்துடன், திக் ஆக சூட்டுடன் இருக்க போண்டா, பஜ்ஜி என்று சடுதியில் காலியாகிறது. அந்த காரத்துடன் நாக்கு தவித்துக்கொண்டு இருக்கும்போது, காபி சுட சுட வருகிறது. ம்ம்ம்ம்.......பிறந்ததில் இருந்து காபி சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன், நரசுஸ் காபி, ப்ரு இன்ஸ்டன்ட், ஸ்ரீரங்கம் பில்டர் காபி, கும்பகோணம் காபி, காபி டே கோல்ட் காபி என்று வித விதமான காபியை பருகிய எனக்கு, இந்த காபியின் முதல் சிப் செய்தவுடனே அதன் மீது காதல் வருகிறது. காபி என்பதை சற்று நிதானமாக பார்ப்போமா..... வெள்ளை வெளேரென்ற பால், அதை சரியான பதத்தில் தண்ணீர் ஊற்றி, நன்கு வறுத்த காபி கொட்டையில் எடுத்த பொடியை, பதமான சுடு தண்ணீர் விட்டு டிகாஷன் எடுத்து, ஒரு கண்ணாடி டம்பளரில் கொஞ்சமே கொஞ்சம் விட்டு, ஜீனியை கரண்டி கொண்டு காதலோடு கலந்து, அதன் மீது பாலை விடும்போது ஒரு ரசாயன மாற்றம் நிகளுமே.... கவனித்து இருக்கின்றீர்களா ?! அதை டீ மாஸ்டர் எடுத்து மேலும் கீழும் சர் சர் என்று ஆற்றி நுரை ததும்ப விளிம்பு வரை நம்மிடம் தரும்போது, நாம் அந்த நுரையை முதலில் ஒரு சவுண்ட் விட்டு உறிஞ்சும்போது "தம் தனனான தம் தம் தாணனான" என்று ஒரு பின்னணி இசையே வரும் ! இங்கு இந்த காபியை முதல் சிப் அடிக்கும்போதே கேட்கிறது அந்த இசை, ஒவ்வொரு சிப் அடிக்கும்போதும் ஒரு காபியின் சுவை இவ்வளவு ருசியாக இருக்குமா என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.ஒரு காபி கடையில் இவ்வளவு கூட்டமா என்று நாம் அதியசயப்பட்டது இங்குதான். மதுரையில் இந்த காபிக்கு செல்ல பெயர்தான்  "கஞ்சா" காபி. ஒரு முறை குடித்து விட்டால், மீண்டும் மீண்டும் குடிக்க தூண்டும் சுவை என்பது சரிதான்.  மதுரை செல்லும்போது, சுவைக்க மறக்காதீர்கள் !!


Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, madurai, coffee, kaapi, new visalams, kanja coffee, best coffee, evening snacks

6 comments:

 1. காஃபியே போதை. இதுல கஞ்சா காஃபியா?!

  ReplyDelete
 2. நீண்ட இடைவெளிக்குப் பின்...

  சுவையான காபியுடன் வந்துள்ளீர்கள்... தொடருங்கள் தலைவரே...

  ReplyDelete
 3. நான் அந்தப் பகுதிக்குச் சென்றால்
  அந்தக் கடையில் குடிக்காமல்
  வருவதில்லை

  சுவைக்குக் காரணம் பில்டர் அடியில்
  கொஞ்சம் அது தடவப்பட்டிருக்கும்
  அதனால் அந்தச் சுவை,
  அந்தப் பெயர் எனவெல்லாம் சொல்வார்கள்

  அருமையான பதிவுடன்
  வெகு நாட்களுக்குப் பின்
  அதுவும் எங்கள் ஊரில் இருந்து என்பது
  மகிழ்வளிக்கிறது

  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 4. பக்கப் பார்வைகள்
  பத்து இலட்சத்தை தாண்டிவிட்டது
  நிச்சயம் பெரும் சாதனையே

  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. கஞ்சா காபியைப் போலவே உங்கள் பதிவும் சுவையே :)

  ReplyDelete
 6. online casino【WG】tournaments, payouts and bonuses
  Top Online Casino with Exclusive Bonus & Games at the Best Online Casinos in Canada. Read our review to find the 온라인 카지노 커뮤니티 best bonuses for real money online

  ReplyDelete