Monday, August 28, 2017

தடம் மாறிய தேடல்கள் !!

சமீபத்தில் எனது நண்பனின் தந்தை தனது பால்ய கால நண்பர்களுடன் ஏற்காடுவிற்க்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பேசி கொண்டிருந்தார். உடனே நண்பன் அடுத்த வாரத்தில் இதை பற்றி விரிவாக பேசலாம், அதுவரை நீங்களும் நானும் கொஞ்சம் அதை பற்றிய தகவல்களை சேகரிக்கலாம் என்று சொல்லி விட்டு என்னோடு கிளம்பினான். அடுத்த வாரத்திலும் எனக்கு அவனை சந்திக்கும் வேலை இருந்ததால் அங்கு சென்று இருந்தேன், அப்போது அவனது தந்தையிடம் "என்ன அங்கிள்..... எப்போ உங்க ட்ரிப் ?" என்று கேட்க அவர் என்னிடம் அடுத்த வாரம் என்று சொன்னாலும் அதில் எந்த உற்சாகமும் இல்லை. எனக்கு எனது நண்பனின் முன் என்னவென்று கேட்கலாம் என்று நினைத்தாலும் இதெல்லாம் தேவையா என்று இருந்து விட்டேன், ஆனாலும் மனம் ஒரு குரங்காயிற்றே.... எனது நண்பன் குளித்து விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு செல்ல, நான் மீண்டும் என்னவாயிற்று என்று அவரை கேட்டேன். சிறிது தயக்கத்துடன் ஒரு ஐம்பது அல்லது அறுபது பிரிண்ட் அவுட் காகிதங்களை எடுத்து என் முன் போட்டு, இதெல்லாம் எனது நண்பன் அவருக்காக கூகிள் தளத்தில் தேடி தேடி அவருக்காக தங்கும் விடுதிகள், உணவகங்கள், சுற்றி பார்க்கும் இடங்கள் என்று நிறைய தகவல்களை கொண்டு வந்திருந்தான். அதை பார்த்த நான் அவரிடம் "பாருங்கள்..... உங்களது மேல் அவனுக்கு எவ்வளவு அன்பு, இவ்வளவு தகவல்களை தேடி எடுத்து இருக்கிறான்" என்று சொல்ல..... அவரோ "நீங்கள் எல்லாம் இந்த தகவல்களை தேடி தந்தது மகிழ்ச்சி என்றாலும் அதை சேகரித்த முறை முற்றிலும் தவறு என்று உங்களுக்கு புரியவில்லையா ?" என்று கேட்க நான் முழித்தேன். அவரே தொடர்ந்து "முன்பெல்லாம் குடும்பத்தை கூட்டி கொண்டு சுற்றுலா செல்லவேண்டும் என்றால் பக்கத்து தெருவில் இருக்கும் நண்பர் ஒருவர் சென்று வந்து இருக்கிறார் என்று தெரிந்துக்கொண்டு அவரிடம் சென்று கேட்ப்போம், அவர் சென்று வந்ததை மகிழ்ச்சியுடன் கதையாக சொல்வார்.... புரிந்ததையும் புரியாததையும் வைத்துக்கொண்டு தேடி சென்று அங்கு புது மனிதர்களுடன் கேட்டு தெரிந்து அந்த இடத்தை உங்களுக்கு காட்டுவதில் ஒரு தந்தையாக மகிழ்ச்சி....."என்று சொன்னவுடன் எனக்கு எனது புத்தியை சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. தேடுதல் யந்திரம் என்று வந்ததில் இருந்து இப்படி எத்தனை தேடல்களை நாம் இழந்து இருக்கிறோம், நமது முந்தைய தகவல் தேடலில் நண்பர்கள் அமைவார்கள், அவர்கள் சென்று வந்த இடத்தை பற்றி பேச வாய்ப்பு இருந்தது..... இன்று கார் ஏறி உட்கார்ந்து GPS சொல்லும் முறையில் அந்த இடத்தை சரியாக அடைகிறோம்,  சுற்றி பார்க்கிறோம், அது உண்மையிலேயே சந்தோசம் தருகிறதா ?!



எனக்கு இன்னமும் யாபகம் இருக்கிறது, எனது தந்தை முதல் முறையாக எங்களை ஊட்டி அழைத்து செல்ல முயன்றபோது அது வடக்கில் இருக்கிறதா இல்லை கிழக்கா என்றெல்லாம் அவருக்கு தெரியாது, ஒரு சராசரி குடும்பத்தை ஊன் உறக்கமின்றி காக்கும் ஒரு குடும்பத்தலைவருக்கு ஊட்டி என்ற இடம் இருக்கிறது என்று தெரிவதே அதிகம் ! அவர்க்கு தெரிந்த வரை என்றோ யாரோ ஊட்டி சென்று வந்து சொன்ன தகவல்கள். அதை யாபக அடுக்கில் இருந்து எடுத்து தனது நண்பர் முருகேசன்தான் என்பது கண்டுபிடித்தார். நான்கு தெரு தள்ளி இருக்கும் அவரது வீட்டை தேடி என்னையும் கூட்டிக்கொண்டு சென்றார். வீட்டில் நுழைந்தவுடன் என்னப்பா இப்போதான் வழி தெரிந்ததா என்று கிண்டலுடன் தொடங்கிய அந்த உரையாடலில், அவரின் மகன் எனக்கு சுட்டி தோழனாக அறிமுகமானான். இருவரும் நண்பர்களாகி விளையாடி முடிக்கவும், எனது தந்தை தகவல்களை சேகரிக்கவும் சரியாக இருந்தது. முடிவில் அங்கிருந்து கிளம்பும் போது "ஊட்டி போறியா..."என்று அவர் கேட்க எனக்கு ஊட்டிக்கு போகமலேயே பெருமையாக இருந்தது !






யாரேனும் வீட்டிற்க்கு வரும்போது இன்றெல்லாம் அவரின் முன் டிவி போட்டு விட்டு நாம் அமைதியாகி விடுவது பழக்கம். ஆனால், பொதுவாக அவர் நாம் தெரிந்திராத ஊரில் இருந்து வந்து இருக்கிறார் என்றால் சிறு குழந்தைகளும், குடும்பமும் அவரை சுற்றி அமர, அவர் சென்று வந்த ஊர் கதைகளையும், அங்கு ஏற்பட்ட அனுபவங்களையும் சொல்லுவதை பார்த்து இருக்கிறீர்களா ? இன்று அதையே சன் டிவி, ஜெயா டிவி போன்றவைகள் விருந்தினர் பக்கம் என்று கொண்டு வந்துவிட்டனர். இப்படி வந்து செல்லும் உறவினர்கள்தான் பிள்ளைகளுக்கு ஹீரோ இல்லையா..... அவரை போல ஆகணும் என்று பிள்ளைகள் படிப்பது என்பது எல்லாம் இன்று கனவு !! இன்று ஒருவர் வந்து ஊட்டி செல்லும் பாதை சரியில்லை என்றால், யூ டியூபில் இருந்து வீடியோ எடுத்து அவர் முன் போட்டு காட்டி அவரின் அனுபவத்தை கேலிக்கு உள்ளாக்குகிறோம்.





ஒரு பயணம் செல்ல வேண்டும் என்று நினைக்கும்போது, அதன் சந்தோசம் அங்கு சென்று நிற்ப்பதில் இருந்து ஆரம்பிப்பதில்லை என்பது எனது நண்பனின் தந்தை சொன்னதில் இருந்து புரிந்தது. அந்த பயணம் செல்ல வேண்டும் என்று யோசித்தவுடன், நண்பர்களிடத்தில் தகவல் சேகரிப்பது, அவர்களின் வீடுகளுக்கு செல்வது, போன் செய்து அங்கு தட்வெட்ப நிலை எப்படி இருக்கிறது என்று கேட்பது, அங்கு செல்லும்போது இந்த போர்வையை வைச்சுக்கோங்க அண்ணா என்று அவர்கள் கொடுப்பது, வீட்டை பார்த்துக்கோங்க.... தோட்டத்துக்கு கொஞ்சம் தண்ணி ஊத்திடுங்க என்று சொல்வது, குடும்பத்துடன் குழந்தைகளுடன் வந்திருக்கும்போது நடத்துனர் ஜன்னல் ஒர சீட்டில் உட்கார இடம் அமைத்து கொடுப்பது, பிஸ்கட் சாப்பிடறியா என்று இன்னொரு குடும்பம் கேட்பது, நில்லுங்க நான் போட்டோ எடுக்கறேன் என்று முகம் தெரியாத ஆள் உதவுவது, எப்படி போவது என்று முழிக்கும்போது ஆட்டோ டிரைவர் முப்பது ரூபா கொடுங்க என்று ஏற்றி செல்வது, இதை நீங்க பார்க்கலியா என்று அந்த ஊரின் ஆட்கள் பாசத்துடன் சொல்வது, உணவு எங்கு நன்றாக இருக்கும் என்று கேட்க்கும்போது அந்த கடைக்கு மட்டும் போகாதீங்க என்று தகவல் சொல்பவர்கள், நடந்து நடந்து களைதிருக்கும்போது பையை எடுத்துவைத்து இங்க உட்காருங்க என்று அட்ஜஸ்ட் செய்யும் மனிதர்கள் என்று இப்படி ஒரு பயணத்தில் கணக்கில் அடங்காத நண்பர்களையும், மனிதர்களையும் சந்திக்கும் சந்தர்ப்பம் இந்த கூகிள் தேடலில் தொலைகிறது என்பது உங்களுக்கு தெரிகிறதா ?!



இன்று ஒரு இடத்திற்கு செல்வதென்றால் அதன் பயண நேரம், எப்படி செல்ல வேண்டும், ரோடு எங்கு நன்றாக இருக்கும், செல்லும் இடத்தில் தங்குவதற்கு ஏற்ற இடம் ரிசெர்வ் செய்வது, எந்த உணவகம் நன்றாக இருக்கும், எப்போது எந்த இடத்தில் கூட்டம் இருக்காது என்று எல்லாமும் நாம் யாரிடமும் கேட்காமல் கூகிள் கொடுத்து விடுகிறது. அங்கு செல்வதற்கு தடம் மாறாமல் செல்ல GPS உதவுகிறது........ நாம் செய்வது எல்லாம் அங்கு சென்று சிரித்துக்கொண்டே போட்டோ எடுப்பது மட்டும்தான் !! பிள்ளைகளுக்கு யாரையும் சார்ந்து இராமல் கற்றுகொடுக்கிறோம் என்பது சில நேரங்களில் புரிவதில்லை நமக்கு !!



ஒரு பயணம், ஒரே ஒரே பயணம் இந்த கூகிள் தேடல் இல்லாமல் மேற்கொண்டு பாருங்கள்...... அந்த பயணம் பற்றி நீங்கள் சிந்திக்க தொடங்கிய கணத்தில் இருந்து சந்தோசமாக உணர்வீர்கள். ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவத்திற்க்காக மேற்கொள்ளபடுவது எனில்...... அந்த அனுபவம் அங்கு சென்றதில் இருந்து ஆரம்பம் ஆகணுமா, இல்லை அங்கு செல்ல நினைத்ததில் இருந்தா ?!!


Labels : Suresh, Kadalpayanangal, Google, Payanam, Travel, GPS, Enjoy the travel, Thoughts