Wednesday, November 29, 2017

ஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் !!

தூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுகம் மட்டுமே நியாபகத்துக்கு வரும் ! ஒரு முறை கொடைக்கானல் சென்று கொண்டு இருக்கும்போது, ஒரு ஹோட்டலில் நிறுத்தி சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது அங்கே தூத்துக்குடி மக்ரூன் என்று ஒரு பாக்கெட் இருந்தது, கொஞ்சம் ஸ்வீட் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று எல்லாவற்றையும் பார்த்தபோது இந்த மக்ரூன் பாக்கெட் ஒன்றையும் பார்த்தும் எனக்கு வாங்க தோன்றவில்லை, ஆனால் சிலர் ஒன்று இரண்டு என்று போட்டி போட்டு வாங்கி சுவைக்கும்போது, நானும் ஒன்றை வாங்கி வாயில் போட்டபோது அப்படியே கரைந்து சென்றது... தூத்துக்குடி உப்பளங்கள் மட்டும் பேமஸ் இல்லை, என்று புரிந்த நாள் அன்று !!

தூத்துக்குடி இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். நீர் நிறைந்த நிலத்தைத் தூத்துத் துறைமுகமும் குடியிருப்பும் தோன்றிய ஊர் என்பதால் தூத்துக்குடி என்றானது. இது ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10ஆவது மாநகராட்சியாக ஆகஸ்ட் 52008 இல் அப்போதைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும்உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. கி.பி. 1532-இல் முதன் முதலாக போர்ச்சுக்கீசியர்கள் இம்மாவட்டத்தில் கால் வைத்தனர். 1658-இல் டச்சுக்காரர்கள் வந்ததனால் போர்ச்சுகல் ஆதிக்கம் அகன்றது. பாளையக்காரர் களின் அழைப்பின் பேரிலும், திருவாங்கூர் மன்னரின் படை உதவியுடனும், டச்சுக்காரர் கள் முன்னேறத் தொடங்கினர். முகம்மது யூசுப் படைதிரட்டுவதை கேள்விப்பட்டதும் டச்சுக்காரர்கள் மணப்பாட்டை காலி செய்து விட்டு, தூத்துக்குடி வழியாக தாய்நாடு சென்று விட்டனர். நாயக்கர் ஆட்சி சந்தாசாகிப்பினால் முடிவுற்றது. கர்நாடகம்ஆற்காடு நவாப் கையில் விழுந்தது. முகம்மதலி திருநெல்வேலியைக் கைப்பற்ற ஒரு படையை அனுப்பினார். 1755-இல் ஹெரான் தலைமையில் ஆங்கிலேயர் படை கிளம்பியது. பாளையக்காரர்கள் கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் இரண்டையும் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் ஒப்படைத்தனர். இக்காலத்தில் நவாப்பிற்குக் கப்பங்கட்ட மறுத்தவர்களில் தலையானவர் பூலித்தேவர் ஆவார். தூத்துக்குடி நகருக்கு திருமந்திர நகர் என்றும் முத்துநகர் என்றும் வேறு சிறப்புப் பெயர்களும் இருக்கின்றன. மக்ரூன் என்பது ஒரு போர்த்துக்கீசியச் சொல்லாகும். மக்ரூன் என்றால் போர்த்துக்கீசிய மொழியில் “முந்திரியும் முட்டையும் கலந்த இனிப்பு” என்று பொருள். வணிகத்திற்காகவும், மதத்தைப்ப ரப்புவதற்காகவும் இந்தியாவின் தென்பகுதிக் கடற்கரைக்கு வந்த போர்த்துக்கீசியர்கள் தங்கள் நிர்வாகத்திற்கேற்ற இடமாக தூத்துக்குடியைத் தேர்வு செய்து அங்கேயே தங்கியிருந்தனர். இவர்கள் மக்ரூனை விரும்பிச் செய்து சாப்பிட்டனர். வெள்ளை நிறத்திலிருக்கும் இந்த இனிப்பு வாயில் போட்டாலே கரைந்து விடும். எனவே இதை குழந்தைகள் கூட விரும்பிச் சாப்பிடும். மக்ரூன் தயாரிப்பில் தூத்துக்குடிதான் இன்னும் பெயர் பெற்று விளங்குகிறது. தூத்துக்குடியை நிர்வகித்த பிரபுக்களும் பாதிரிமார்களும் பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் இருந்து கொல்லம் வழியாக கப்பல்களில் முந்திரிக்கொட்டைகளைக் கொண்டுவந்து மக்ரூன் செய்து சாப்பிட்டார்கள். கொல்லம் வழியாக வந்ததால் முந்திரிக்கொட்டையை தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் கொல்லாக்கொட்டை என்று அழைக்கிறார்கள்.
உங்களில் ஒரு சிலர், நான் வெளிநாடு சென்றபோது மக்ரூன் என்பதை பிஸ்கட் போன்று பார்த்தேன், ஆனால் இங்கு கூம்பு வடிவில் இருக்கிறதே என்று கேட்டால்.... உங்களுக்காகவே இந்த விளக்கம். பிரான்ஸ் நாட்டில் இதை மாகேரோன் (Macaron) என்பார்கள், நம்மவர்கள் இதை மக்ரூன் (Macroon) என்பார்கள், இரண்டுக்கும் வித்யாசம் என்பது தேங்காய் மற்றும் பாதாம் என்பதுதான் ! போர்த்துகீசியர்கள் இங்கே வருவதற்கு முன்பு இந்த மாகேரோன் என்பதை பாதாம் பவுடர், முட்டை மற்றும் ஐசிங் சர்க்கரை ஆகியவற்றை கொண்டு செய்தனர், இந்தியா வந்த பின்பு இந்த மாகேரோன் என்பதை மிகவும் மிஸ் செய்ததால், இங்கு இருக்கும் பொருட்களான முந்திரி, சர்க்கரை, முட்டை கொண்டு செய்தனர், அதுவும் இதை போன்றே சுவை இருந்தது. காலப்போக்கில், நமது மக்கள் தேங்காய் சேர்த்து அதை மக்ரூன் ஆக்கிவிட்டனர். தயவு செய்து யாரும் ஐரோப்பா சென்றால், அட மக்ரூன், இதை எங்கள் ஊரிலும் செய்வார்களே என்று அவர்களை வெறியேற்ற வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன் !!


 

இந்த முறை தூத்துக்குடி சென்றபோது, மக்ரூன் என்பதை சுவைக்கவும், அதை செய்வதை பார்க்கவும் நினைத்தேன். ஒரு காலை பொழுதில் மதுரையில் இருந்து கிளம்பி சென்று தூத்துக்குடியை அடைந்தபோது, அந்த உப்பு காற்றின் ஸ்பரிசம் வரவேற்றது. ஊருக்குள் நுழையும் முன்னரே, இங்கே நல்ல மக்ரூன் எங்கு கிடைக்கும் என்று கேட்டதற்கு.... எல்லோரும் சொன்னது கணேஷ் பேக்கரி மற்றும் ஞானம் பேக்கரி என்று ! ஏலேய், வண்டிய விட்றா கோவாலு !! தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகிலேயே இருக்கிறது இந்த ரெண்டு கடைகளும். வழக்கமான பேக்கரி போல வெளியில் இருந்து பார்த்தால் பப்ஸ், கேக் என்று இருந்தது. நமது முகத்தில் இருந்த தேடலை பார்த்தே அந்த பேக்கரி ஆள் கேட்டார்.... மக்ரூன் வேணுமா ?!

ஞானம் பேக்கரி... பேருந்து நிலையம் எதிரே !

கணேஷ் பேக்கரி... எல்லோரும் பரிந்துரைப்பது... பேருந்து நிலையத்தில் இருந்து 5 நிமிட தூரத்தில் !

தனலட்சுமி பேக்கரி... இவர்கள்தான் மக்ரூன் இந்த வடிவத்துக்கு காரணம் என்கிறார்கள் ! தலைமுறை தலைமுறையாக இருக்கிறதாம் இந்த பேக்கரி !!

நமது தலை வேக வேகமாக ஆட ஆரம்பிக்கிறது, ஒரு சிறிய பாக்கெட்டில் வைத்து நமக்கு நீட்ட, கமல்ஹாசன் இரண்டு லட்டுவை வைத்துக்கொண்டு ஒரு ஏகாந்த பார்வை பார்ப்பாரே அதுபோலவே நாமும் கையில் வைத்துக்கொண்டு பார்த்த பார்வைக்கு கடைக்காரர் ஒரு ஜெர்க் அடித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்... அவனா நீயி, என்று நாம்தான் அர்த்தம் கொள்ளவேண்டும். ஒரு கொழுக்கட்டையின் கனத்தை எதிர்பார்த்து ஒன்றை வாங்கினால், மிகவும் இலவு ஆக இருந்தது கண்டு ஆச்சர்யப்பட்டோம். அந்த கூம்பு வடிவத்தை பார்த்தால், நமது தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வெள்ளை பெயிண்ட் அடித்தது போன்று இருந்தது. ஒன்றை எடுத்து கடிக்க... பல்லில் பட்டதுதான் தெரியும், பாகாய் கரைந்தது வாயில். இந்த மக்ரூன் என்பதின் குணாதிசயமே இந்த கரைதலில்தான் இருக்கிறது, அந்த கரைதலின் சுகத்தை வார்த்தைகளில் எழுத முடியாது, அப்படி ஒரு பேரனுபவம். கொஞ்சம் கொஞ்சமாக, கருக் மொறுக் என்று கரையும் இந்த மக்ரூன்..... உலகின் சுவையான தின்பண்டங்களில் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை !


நாம் சாப்பிட்ட முறையை பார்த்து ரசித்து கொண்டு இருந்தார் அந்த பேக்கரி முதலாளி, சிறிது சிறிதாக அங்கேயே நாங்கள் எங்களது காலை உணவாக இந்த மக்ரூன் என்பதை சாப்பிட்டது கண்டுகொண்டிருந்தார். அவரிடம் நாங்கள் இந்த மக்ரூன் செய்முறையை பார்க்க வேண்டும், பெங்களுருவில் இருந்து வந்து இருக்கிறோம் என்றபோது, பல பல கேள்விகளுக்கு பிறகு அனுமதித்தார். உள்ளே நுழைந்து பார்த்தபோது ஒரு பக்கத்தில் கிடந்த முட்டை குவியலை கண்டு மலைத்த எங்களை, இந்த மக்ரூன் என்பதின் முக்கிய விஷயமே இந்த முட்டையின் வெள்ளை கருதான் என்று விளக்கினார் அங்கு மக்ரூன் செய்முறையில் கைதேர்ந்தவரான ஒருவர். முட்டையின் வெள்ளை கருவை மட்டும் பிரித்து எடுத்து அதை பருப்பு கடைவதை போன்று கடைகின்றனர், அது நுரை ததும்ப ததும்ப வர, அதில் முந்திரியின் சிறிய துகள்களை கொண்டும், ஐசிங் சர்க்கரை கொண்டும் மீண்டும் கடைய, முடிவில் பேஸ்ட் போன்று வருகிறது. அதை ஒரு கோன் கொண்டு எடுத்து டிரேயில் மக்ரூன் வடிவத்தை கொண்டு வருகின்றனர் (ஒவ்வொரு பேக்கரியும் ஒவ்வொரு வடிவத்தை வைத்து இருக்கின்றனர், வெளியில் இருந்து பார்த்தால் கூம்பு வடிவம்தான், ஆனால் சுற்று, கூம்பு மட்டம் என்று சற்று மாறுகிறது, இதனால் எந்த பேக்கரி மக்ரூன் என்று கண்டுபிடிக்கலாம் !!), முடிவில் அதை கொண்டு ஒவெனில் வைத்து எடுக்க, மக்ரூன் தயார் !! 
குறிப்பு : பேக்கரி முதலாளி பெரிய மனதுடன் எங்களை மக்ரூன் செய்வதை காண அனுமதித்தாலும், புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ஆகவே, கீழே இருக்கும் புகைப்படங்களை கூகிள் இமேஜ் மூலம் கண்டறிந்து இங்கு உங்களுக்காக பகிர்கிறேன். புகைப்படம் எடுத்தவர்க்கு நன்றி !! 

அடுத்த முறை தூத்துக்குடி செல்லும்போது மக்ரூன் சாப்பிட மறக்காதீர்கள். உப்பளங்களுக்கு மட்டுமே புகழ்பெற்றதில்லை தூத்துக்குடி என்பதை மனதில் கொண்டு, மக்ரூன் சுவையில் கரைந்து போக மறக்காதீர்கள். ஒரு முறை சுவைத்துவிட்டால், மீண்டும் சுவைக்க தூண்டும் சுவை... மிஸ் பண்ணாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க !!


Labels : Suresh, Kadalpayanangal, Thoothukudi, Tuticorin, Macaroon, Macroon, Makroon, French, Tasty snack, Tamilnadu, district special, oor special, oorum rusiyum

Tuesday, November 28, 2017

அறுசுவை - கல்கத்தா ரசகுல்லா !!

கல்கத்தா.... இந்த பெயரை சொன்னவுடன், நமது நினைவுக்கு வருவது ஹவுரா பாலம், டிராம் வண்டி மற்றும் ரசகுல்லா ! அவ்வப்போது கல்கத்தா சென்று வந்தாலும், நிறைய இடங்களில் ரசகுல்லா என்று கேட்டு வாங்கி சாப்பிட்டாலும், ஏதோ ஒன்று குறைந்ததே என்றே தோன்றியது, எனது கல்கத்தா நண்பரிடம் இதை தெரிவித்த போது, வாருங்கள் ஒரிஜினல் ரசகுல்லா சாப்பிடலாம் என்று என்னை ஒரு மாலை பொழுதில் கூட்டி சென்றார். வெள்ளை நிறத்தில் ஜீராவில் மிதக்க விட்டு கொண்டு வந்ததை வழித்து வழித்து சாப்பிடும் சுவை.... இப்போதுதான் புரிகிறது கல்கத்தா ரசகுல்லா என்று ஏன் சொல்கிறார்கள் என்று !!


கல்கத்தாவின் பிஸியான நான்கு முனை சந்திப்பான எஸ்ப்ளானடே (Esplanade) கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது இந்த கடை. வெளியில் அந்த கால டிராம் வண்டி குறுக்க நெடுக்க ஓடி கொண்டு இருக்கிறது, பெங்காலி முகங்கள் எங்கெங்கும், பழைய கால கட்டிடங்கள் என்று நம்மை பழைய காலத்திற்கு இட்டு செல்கிறது. இந்த நான்கு முனை சந்திப்பில் எங்கு இருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம், சிகப்பு நிற போர்டு ஒன்றில் KC Das என்று எழுதி இருக்கிறது. பெயரை பார்த்தவுடனேயே பலருக்கும் நாக்கில் எச்சில் ஊறுவதை பார்க்க முடிகிறது, மிக சிறிய கடையின் உள்ளே சென்று பார்த்தாலே தெரிகிறது.... எல்லோரும் ரசகுல்லா என்று கேட்டு வாங்கி சாப்பிடுவதை !!கடையின் உள்ளே நுழைந்து என்ன சாப்பிடலாம் என்று பார்த்தாலே மனதுக்கும், கண்களுக்கும் மகிழ்ச்சி விருந்து காத்திருக்கிறது. பெங்காலி ஸ்வீட் வகைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது, ஒவ்வொருவரும் குறைந்தது அரை கிலோ ஒவ்வொன்றிலும் வாங்கி செல்கின்றனர். இதுவரை ஜிலேபி, மைசூரு பாகு என்று சாப்பிட்ட உங்களுக்கு, பெங்காலி ஸ்வீட் வகைகளின் பெயர் தெரியுமா ? ரசகுல்லா, ராஜ் போக், சஹானர் டோஸ்ட், ரோசம்மாதிரி, சமசம், தோய், சென்டெஸ், கிர் காதம், கிரதேஷ் என்று பெயரே நிறைய வித்யாசமாக இருக்கிறது. எனது கூட வந்த நண்பர், என்ன சாப்பிடறீங்க என்று கேட்டபோது ரசகுல்லா என்று மட்டுமே சொல்ல வந்தது, அடுத்து ஒன்றை சொல்ல முனைந்தபோது நாக்கு சுளுக்கி கொண்டது !!
ரசகுல்லா.... ஒரு வெள்ளை நிற அழகி எனலாம் ! கவனித்து பார்த்தால், உங்களுக்கு ஒன்று புரியும்... நமது தமிழ்நாட்டில் எல்லா ஸ்வீட் வகைகளும் (பால்கோவா தவிர்த்து) எல்லாமுமே பொன்னிறத்தில் இருக்கும். தங்க நிறத்தில் இருப்பதை பார்த்தாலே நமக்கு வசீகரம் என்பதால் இருக்கலாம், தோசையே நமக்கு முறுகலாக பொன்னிறமாக இருக்க வேண்டும், அம்மா மட்டும் தோசையை கொஞ்சம் வெள்ளையாக கொடுத்து விட்டால் போச்சு, சரியாக வேகவில்லை என்று சொல்லிவிடுவோம், இதுவே எல்லா விதமான ஸ்வீட் வகைகளுக்கும் எனலாம். இந்த ரசகுல்லா பார்க்கும்போதும் இது போலவே தோன்றுகிறது, என்னங்கடா கொஞ்சம் பொன்னிறமாக பொறித்திருக்க கூடாதா.... உஜாலா போட்டு பண்ணிடீங்களோ ?!

சரி, ரசகுல்லாதான் வெள்ளையாக இருக்கிறது என்று பார்த்தால், அதை கொண்டு வந்த கப் கூட வெள்ளைதான், அதனால்தான் இந்த பெங்காலிகாரன் எல்லாம் வெள்ளையா இருக்கானோ ?! ஒரு சின்ன கப், அதில் தெள்ள தெளிவாக மிதக்கும் திரவம், அதன் மேலே சற்றே குவார்ட்டர் போட்டு ஆடியபடியே ஒரு உருண்டையான வெள்ளை வெளேரென்ற ஒரு வஸ்து என்று இருந்தது. அந்த வெள்ளை நிற வஸ்துவை கொஞ்சம் உற்று நோக்கினால் பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கும் நிலம் போல வெடித்து வெடித்து இருந்தது, இவ்வளவு ஜீராவில் ஊற வைத்துமா இப்படி என்று யோசிக்க வைக்கிறது ! கண்களாலேயே ஒரு சுவீட்டை சாப்பிட முடியுமா என்று கேட்டால், அங்கு சென்று பார்த்தால் தெரியும்... நாடி, நரம்பு, ரத்தம், சதை என்று எல்லாமுமே ஸ்வீட் வெறி பிடித்து அலையும் ஒருவனை அங்கு பார்க்கலாம் (நான் இல்லீங்க சார் !!), அந்த ரசகுல்லாவை கொண்டு வந்து உங்களது முன்னே வைக்கும்போது, காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரி என்பதற்கு உதாரணமாக, அங்கு இருந்த பெங்காலிகள், அந்த பெரிய ரசகுல்லாவை பார்க்கும் ஒரு பார்வையிலேயே அதை சாப்பிட்டு விடுகின்றனர், பின்னர் அப்படியே எடுத்து வாயில் போட்டு, வாய் வெடிக்க வெடிக்க மெல்லுகின்றனர் !நான் ரசகுல்லாவை பார்த்து, காதலோடு அதை அணுகி, ஸ்பூன் எடுத்து கொஞ்சமே கொஞ்சம் விள்ளலாய் எடுத்து வாயில் எடுத்து போட போகும்போது.... எதிரில் பார்த்தால் எனது நண்பர், அவரது எதிரில் இருந்த எல்லாவற்றையும் காலி செய்துவிட்டு அமர்ந்து இருந்தார், அவரது பார்வை... டேய், என்ன தெய்வீக காதலா, பார்த்து ரசகுல்லாவிற்கு வலிக்க போகுது, என்று சொல்லாமல் சொல்லியது. அந்த விள்ளலை வாயில் போட, சொர்க்கம் மதுவிலே என்று யார் சொன்னது, இதிலும்தான்.... கொஞ்சம் கொஞ்சமாக அந்த ரசகுல்லாவை கடிக்க, கடிக்க, அதில் இருந்த ஜீரா இப்போது சிறு சிறு பீஸாக இருந்த அந்த ரசகுல்லாவோடு கலந்து ஒரு ஏகாந்த சுவையை கொடுத்தது. இன்னும் கொஞ்சம் பிய்த்து எடுக்க.... அடேய், எவண்டா அது ரசகுல்லாவின் உள்ளே ஓட்டையை போட்டது ?! நாங்க உளுந்த வடையின் வெளியிலே ஓட்டையை போடவே கஷ்டப்படறோம், நீங்க எப்படிடா ரசகுல்லா உள்ளேயே ஓட்டைய போடறீங்க ?!


ஒரு என்ஜினீயர் ரசகுல்லா சாப்பிட்டா இப்படி எல்லாமாடா சோதிப்பீங்க ?! எங்க ஊரில் எல்லாம் இட்லியை, கொழுக்கட்டை மாதிரி பிடித்து ஜீராவில் போட்டு கொடுத்து இதுவரை ரசகுல்லா அப்படின்னு சொல்லி இருக்காங்களா, என்று நான் யோசிக்கும்போதே, ஒரு பிரளயம் நடந்து கல்கத்தா நடுவினில் கிலோமீட்டர் கணக்கில் ஓட்டை விழுந்து விட்டதோ என்று நண்பர் அதிர்ச்சியாகி என்னை பார்க்க, நான் ரசகுல்லாவின் உள்ளே இருந்த ஓட்டையை பார்க்க, அட, இப்படி ரசகுல்லா செஞ்சாதான் உள்ளே ஜீரா நல்லா ஊரும், சாப்பிடுங்க என்றார். ஓஹோ... இதனால்தான் இந்த கொல்கத்தா ரசகுல்லா இவ்வளவு பேமஸ் போலும் !! ஆனாலும், இந்த இன்ஜினியரிங் அறிவுக்கே சவால் விடுகிறது இந்த ரசகுல்லாவின் உள்ளே வைத்த ஓட்டை !!அடுத்த முறை, நீங்கள் தமிழ்நாடு விட்டு வெளியே செல்லும்போது, அப்படியே ஷார்ட் கட் எடுத்து இந்த கல்கத்தா வந்து இங்கு ரசகுல்லா சாப்பிட்டு விடுங்கள். பெங்காலி ஸ்வீட் வகைகளிலேயே இந்த இனிப்பு அருமையோ அருமை. அப்படியே எனக்கும் ஒன்று வாங்கி வந்தால் தன்யனாவேன் !!

Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, arusuvai india, kolkatta, kalkatta, rasagullaa, KC Das, best sweet, Best indian sweet, west bengal

Wednesday, November 22, 2017

மறக்க முடியா பயணம் - அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி !!

நீர்வீழ்ச்சி எனும்போது அந்த ஆர்ப்பரிக்கும் ஓசையும், அந்த குளிர்ச்சியும் எப்போதும் மனதில் வரும்.  இந்த முறை ஒரு நீர்வீழ்ச்சி செல்ல வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்தபோது, அர்ஜுனா அர்ஜுனா என்று தங்க தலைவி நமிதா டிவியில் ஆடிக்கொண்டு இருந்தார், அப்போது இப்படி ஒரு நீர்வீழ்ச்சிக்குத்தான் செல்லவேண்டும் என்று முடிவெடுத்து தேட ஆரம்பித்தபோது, அவர் இடுப்பை நெளித்து ஆடியது நமது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி என்று தெரிந்தது ! அடுத்து அங்கே செல்லும் பயணம் ஆரம்பமானது.... என்ன சோகம் என்றால், செல்லுவதற்கு ஆயத்தமானது எல்லாம் ஆண் பிள்ளைகள் !!கோயம்பத்தூரில் இருந்து சுமார் 165 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த நீர்வீழ்ச்சி, நான்கு மணி நேர பயணம் ! தமிழ்நாடு எல்லை வரைக்கும் ரோடு போட்டுக்கொண்டே டே டே டே டே டே இருப்பதால் பயணம் சற்று மேடு பள்ளமாக இருக்கிறது. அதன் பின்னர் ரோடு நன்றாக இருப்பதால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நாங்கள் முதல் நாள் மாலை சுமார் ஆறு மணிக்கு கிளம்பி சாலக்குடி என்னும் ஊருக்கு சென்று விட்டோம், அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு புட்டும் கடலைக்கறியும், கட்டன் சாயாவும் குடித்துவிட்டு புறப்பட்டு விட்டோம். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழி நன்றாகவே இருந்தது, வழியெல்லாம் பல பல ஹோட்டல் இருந்தது, சாலக்குடியில் தங்கியதை விட இங்கே வந்து இருக்கலாமோ என்று தோன்றியது.
சுமார் ஒரு மணி நேர பயணத்தில் ஒரு சிறிய திருப்பத்தில் நிறைய வண்டிகளும், கடைகளும் இருக்கும் இடத்தை அடைந்தபோது, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வந்து விட்டது என்று அறிந்தோம். சுமார் 15 கடைகள், ஒரு சிறிய போர்டு அழகே வரவேற்றது. இங்கு நிறைய பேருந்துகள் வருகின்றன என்று ஒரு பதாகையை பார்த்தவுடன் தெரிந்தது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி என்பது ஒரு தொடக்கம்தான் என்றும், அதனை தொடர்ந்து சென்றால் வலைச்சல் நீர்வீழ்ச்சி, சர்ப்ப நீர்வீழ்ச்சி என்று அடுத்தடுத்து வருவதை அறிய முடிந்தது. விஷயம் தெரிந்த பலர், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி கூட்டமாக இருக்கிறது என்று இருக்கும் வாகனங்களை வைத்து கணக்கு போட்டு அடுத்த நீர்வீழ்ச்சிக்கு செல்வதை காண முடிந்தது. டிக்கெட் வாங்கி கொண்டு நீர்வீழ்ச்சி செல்லும் பாதையில் பயணிக்க தொடங்கினோம்.... டேய், நீர்வீழ்ச்சிக்கு சொய் என்று செல்லுமாறு ஒரு சறுக்கு மரம் வைக்க கூடாதா !!
முதலில் நடக்க ஆரம்பிக்கும்போது நல்ல பாதை போன்று தோன்றினாலும், சிறிது தூரத்தில் மலை இறங்க ஆரம்பிக்கும்போது சற்று ஆபத்தானதாக இருக்கிறது !  நம்ம தங்க தலைவி நமீதா ஆடிய இடம் எல்லாம் இறங்கி குளிக்க அனுமதி கிடையாதாம், அங்கு பக்காவாக கயிறு கட்டி, போலீஸ் போட்டு வைத்து இருக்கிறார்கள். அந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்று சிறிது படம் எடுக்க மட்டுமே அனுமதி ! அப்போ அருவி குளியல் ?!
குளிக்க முடியாதா என்று ஏக்கம் வரும்போது, அருகில் இருந்த சிலர், இந்த மலை உச்சிக்கு செல்லுங்கள் அங்கே குளிக்க முடியும் என்றனர். நடந்து வந்த போது, ஒரு நல்ல பாதை முடிந்து மலை இறங்க ஆரம்பித்தபோது இப்படி குளிக்க முடியாது என்ற பதாகை எதுவுமே இல்லையென்பதால், நிறைய பேர் தெரியாமல் கீழே தட்டு தடுமாறி இறங்கி மூச்சு வாங்கி கொண்டு இருந்தனர். கீழே இறங்கியதை விட, மேலே ஏறும்போது நிறைய இடங்களில் சறுக்கி விடுகிறது. ஒரு வழியாக மேலே ஏறி வந்தபோது அந்த நெடிய ஆறு விழும் இடம்தான் குளிப்பதற்கு என்று புரிந்தது, அந்த நீர்தான் நீர்வீழ்ச்சியாக கீழே சென்றது ! 


முடிவில் அந்த ஆற்று படுகையை பார்த்தபோது எங்கும் பாறைகள், எதிலும் பாறைகள் மட்டுமே. நாங்கள் சென்ற சமயத்தில் அங்கங்கு சில இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடி கொண்டு இருந்தது. ஆடைகளை களைந்துவிட்டு ரெடி ஆனோம். ஒரு காலை வேளையில், சில்லென்று வீசும் காற்றின் முன், ஒரு சிறு ஆடையை மட்டும் இடுப்பில் கட்டிக்கொண்டு, ஐஸ் போன்று ஓடிக்கொண்டு இருக்கும் தண்ணீரில் இறங்க எவ்வளவு தைரியம் தேவை தெரியுமா ? இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பது என்பதே ஒரு கலை எனலாம், முதலில் நுனி காலை விட்டு அந்த குளிர்ச்சியில் நடுங்க வேண்டும், அடுத்து முட்டிகால் வரை, மனதில் வேண்டாம் என்று தோன்றினாலும், அடுத்து சிறிது தண்ணீரை எடுத்து உடம்பின் மேலே ஊற்றிவிட்டு, இந்த தண்ணீரில் குளிப்பார்களா யாராவது என்று புலம்ப வேண்டும், அடுத்து எல்லோரும் பகடி செய்தவுடன் ஒரு வீரம் வந்து தொபுக்கடீர் என்று குதிக்க வேண்டும், ஐயோ என்று கத்திவிட்டு வெளியே ஓடி வந்து, மீண்டும் பின்னர் இதுபோல ஒரு மூன்று முறை செய்தபின்பு அந்த ஆற்று நீரில் ஒரு எருமையை போல விழுந்து கிடக்க கிடக்க.... ஒரு ஜென் நிலையை அடைவோம் !!இத்துடன் இந்த பயணம் முடிவதில்லை, ஒரு நீர்வீழ்ச்சி சென்று குளித்து முடித்து வந்தவுடன் வயிறு மிக பயங்கரமாக பசிக்க ஆரம்பிக்கும். அதுவும் இறங்கிய பாதையில் இப்போது பசியுடன் ஏறும்போது இன்னும் அதிகமாக பசிக்கும், அப்போது எதை குடுத்தாலும் ருசி பார்க்காமல் சாப்பிடுவோம். இந்த இடத்தில், அவ்வளவாக கொறிக்க எதுவும் கிடைப்பதில்லை, ஆகவே உங்களுக்கு உண்டானதை நீங்களே கொண்டு செல்லுங்கள் !! என்ன முடிவெடுத்துவிட்டீர்களா.... அடுத்து உங்களது பயணம் இங்குதானா ?!

Labels : Suresh, Kadalpayanangal, Athirapally, Athirapalli, Waterfalls, kerala, near coimbatore, waterfalls near coimbatore, marakka mudiyaa payanam

Monday, November 20, 2017

ஊர் ஸ்பெஷல் - ஊட்டி வர்க்கி !! (பகுதி - 2)

ஊட்டி வர்க்கி (பகுதி - 1) படித்த பலரும் இன்று வரை ஊட்டி வர்க்கி என்பதை பற்றி இவ்வளவு தெரிந்து கொண்டதில்லை, ஆனால் இன்று இதை படித்த பிறகு எவ்வளவு சுவாரசியமான, சுவையான தகவல்கள் என்று பாராட்டினார்கள், நன்றி நண்பர்களே !! சென்ற பகுதியில் ஊட்டியின் பெயர் காரணம், வர்க்கி என்ற சொல் உருவான காரணம், பிஸ்கட், குக்கீஸ், ரஸ்க் என்பதின் வித்யாசம் எல்லாம் பார்த்தோம்... இந்த வாரம் வாருங்களேன் இந்த வர்க்கி என்பதின் சுவையான பயணத்தை தொடர்வோம் ! குன்னூர் சென்று வீட்டிற்கு வர்க்கி வாங்கி செல்ல வேண்டும், எங்கு கிடைக்கும் என்று கேட்டால் எல்லோரும் சொல்வது நியூ இந்தியன் பேக்கரி !! பல முறை ஊட்டி சென்று இருந்தபோதும், அவசர கதியில் கிடைத்த இடத்தில் வாங்கியதால் ஊட்டி வர்க்கி என்பதின் உண்மையான சுவையை தெரிந்து கொள்ள முடியவில்லை.... ஆனால் இந்த முறை ஊட்டி வர்க்கிக்கு புகழ் பெற்ற நியூ இந்தியன் பேக்கரி சென்றோம், உண்மையிலே ஊட்டிக்கு பெருமை சேர்க்கும் இடம்தான் !!
வாசனை.... எந்த ஒரு உணவு செய்யும்போதும் ஒரு வாசனையை வைத்து வாயினுள் ஒரு ஊற்று சுரக்கும். கேசரி செய்யும்போது நெய்யில் முந்திரி வறுக்கும் வாசனை, பேக்கரியில் பன் செய்யும்போது வரும் வாசனை, கடுகும் உளுந்தும் சேர்த்து தாளிக்கும்போது வரும் வாசனை, சோளக்கருத்தை சுடும்போது வரும் வாசனை, மீனை பொரிக்கும்போது வரும் வாசனை, சூடான காபியின் வாசனை, வெங்காய போண்டா பொரிக்கும்போது வரும் வாசனை, காரம் போட்ட மசாலா பொறியின் வாசனை, கடலையை வேக வைக்கும்போது வரும் வாசனை.... என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு அலாதியான வாசனை உண்டு, அது போலவே இந்த வர்க்கி என்பதற்கும் ! வர்க்கி செய்யும் இடத்திற்கு சென்றபோது அந்த இடமே இந்த வாசனையில் நிரம்பி இருந்தது, ஒரு உணவை சாப்பிடாமலே காதல் கொள்ளுவதென்பது இப்படிப்பட்ட வாசனையை வைத்துதான், வர்க்கியின் வாசனை என்பதை நீங்கள் உணர்ந்து பார்த்து இருக்கின்றீர்களா இதுவரை !!


வர்க்கி என்பதின் வடிவத்தை கவனித்து பார்த்து இருக்கின்றீர்களா ? ஒரு சிறிய பொட்டலம் போல, உங்களது உள்ளங்கையின் உள்ளே அடங்கிவிடும், கொஞ்சம் உற்று பார்த்தால் அடுக்கு அடுக்காக பிரிந்து, ஒரு மலரினும் மெல்லிய உடலினை கொண்டு, நீங்கள் கொஞ்சம் அமுக்கி பிடித்தாலே பொல பொலவென உதிரும் இந்த வடிவம் அதிசயம்தான். முதலில் இந்த வர்க்கி எப்படி செய்வது என்று பார்த்து விடுவோம், பின்னர் இந்த பயணத்தில் நடந்தவைகளை பார்ப்போம்... வர்க்கி செய்வதற்கு பெரிய அளவில் பொருட்கள் எல்லாம் தேவை இல்லை, ஆனால் இங்கு முக்கியம் ஈஸ்ட் என்பதுதான். இந்த ஈஸ்ட் என்பதுதான் இதனின் சுவைக்கான முக்கிய காரணம். மைதா, தயிர், சர்க்கரை, தண்ணீர் ஆகியவற்றை நன்கு நீர்க்க கரைத்து, காற்று புகாமல் மூடி வைத்து, 2 நாட்கள்  கழித்து திறந்து பார்த்தால் வருவது ஈஸ்ட்.  இதை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில்  வைத்திருந்து உபயோகிக்கலாம். இதன் செய்முறையை பாருங்களேன்...

மைதா -   2 கப்
சர்க்கரை -  3 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
டால்டா - கால் கப்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு டீஸ்பூன்
ஈஸ்ட் - இரண்டு சிட்டிகை (ஃப்ரெஷ் ஈஸ்ட்) 
தண்ணீர் - தேவையான அளவு.

மைதாவை ஈஸ்ட் சேர்த்து தண்ணீர் விட்டு இளக்கமான மாவாகப் பிசைந்து ஓர் இரவு முழுதும் ஈரத்துணி போட்டு ஊற விடவும்.மறுநாள் அந்த மாவை நன்கு பிசையவும். டால்டா, எண்ணெய், நெய், உப்பு, சர்க்கரையை அடுப்பில் வைத்து கரையும் வரை சூடு செய்து மாவில் ஊற்றி பிசையவும். மாவு,  எண்ணெய்களை இழுத்து நன்கு நீண்டு வரும். மிருதுவான தன்மை வரும் வரை பிசைய வேண்டும். தேவைப்பட்டால் சிறிது  டால்டா சேர்த்துக் கொள்ளலாம்.ஒரு இன்ச் தடிமனுள்ள சப்பாத்தி போல திரட்டி ஒன்றரை இன்ச் அகலத்தில் மாவை குறுக்கு  வெட்டாக வெட்டவும். அதனை விரல்களால் சுருட்டி இறுதியில் எதிர் திசையில் மடித்தால் வர்க்கியின் மடிப்பு வரும்.அவனை (Oven) அதன்  அதிகபட்ச வெப்பத்தில் 10 நிமிடம் சூடாக்கவும். இருபுறமும் சூடாவது போல செட்டிங் மாற்றி, 180 டிகிரியில் 20 முதல் 30  நிமிடம் வேக விடவும்.வெந்ததும் சிறிது ஆறவிட்டு, காற்று புகாத பாத்திரத்தில் எடுத்து வைக்கலாம்.வர்க்கி எப்படி செய்வது என்பதை பார்த்தாகிவிட்டது, இனி பயணத்தின் அனுபவத்தை பார்ப்போமா ? குன்னூர் சென்று நியூ இந்தியன் பேக்கரி சென்று வர்க்கி வாங்கி கொண்டே, சற்று கண்களை ஓட்டி பார்த்தபோது அங்கு வர்க்கி தயாரிப்பதாக தெரியவில்லை, நான் இப்படி எட்டி எட்டி பார்ப்பதை கவனித்த கடைக்காரர், என்ன வேண்டும் என்று கேட்க, அந்த பிஸியான வியாபார சமயத்திலும் என்னை பற்றி கூறி விட்டு, உங்களது வர்க்கி செய்யும் முறையை பார்க்க வேண்டும் என்றேன். இந்த பிஞ்சு மூஞ்சியை பார்த்துவிட்டு, சிறிதாக நகைத்துவிட்டு, வர்க்கி இங்கிருந்து சற்று தள்ளி இருக்கும் இடத்தில் செய்வதாகவும், அந்த இடத்தின் விலாசத்தினை தந்தார்...... ஆகா, நான் வர்க்கி பார்க்க போறேனே, என்று மனம் குத்தாட்டம் போட்டது.
அந்த சிறிய அறையினுள் நுழைவதற்கு முன்னரே வாசனை என்னை தாக்கியது. எனது கண்களை கட்டி விட்டு இருந்தால் கூட அந்த இடத்திற்கு சரியாக வாசனையை வைத்து சென்று இருப்பேன் ! வர்க்கி செய்யும் இடத்தை பார்த்தால், எங்கெங்கும் மைதா மாவை பிசைந்து இருப்பதையும், அதை வர்க்கியாக மடித்து வைத்து இருந்ததையும், அதை ஓவென் கொண்டு வர்க்கியாக மாற்றி வைத்து இருந்ததையும் மட்டுமே காண முடிந்தது. அவர்களின் வேகம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஒருவர் கல்லின் மீது இருந்த மாவை அடித்து பிசைவதையும், இன்னொருவர் அப்படி பிசைந்த மாவினை தட்டையாக்கி கத்தியினை கொண்டு வெட்டுவதையும், இன்னொருவர் அதை பொட்டலம் போல மடிப்பதையும் பார்க்கும்போது இவர்களின் அத்தனை வருட அனுபவமும் கண் முன்னே வந்தது.ஒரு சிறிய ட்ரேயில் அந்த பொட்டலம் போன்று மடித்த வர்க்கியை அடுத்து ஒரு பெரிய உலையின் உள்ளே வைத்துவிட்டு, அங்கேயே நின்று கவனித்து பார்க்க, அது பொரிந்து வந்த அந்த தருணம் உண்மையிலேயே உணவு பிரியர்களின் சொர்க்க தருணங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த வெள்ளை நிற மாவு பொன்னிறமாக ஆக ஆரம்பிக்க, இன்னொரு தட்டு ரெடி ஆனவுடன் அதை வெளியே எடுத்து வைக்க, எனது கண்கள் அதையே விழுங்கி கொண்டு இருந்தன. அதை சிரித்துக்கொண்டே பார்த்த அந்த பெரியவர், ஒரு சிறிய தாளில் ஒன்றை வைத்து கொடுக்க.... ஊதி ஊதி அந்த ஊட்டி வர்க்கி சாப்பிட்ட அந்த பொன்னான தருணம், மறக்க முடியாத ஒன்று !


அடுத்த முறை ஊட்டி சென்றால் மறக்காமல் இங்கு ஊட்டி வர்க்கி வாங்கி சுவைத்து பாருங்கள், வாயில் வைத்தவுடன் கரையும் அந்த மன்மத சுவைக்கு நீங்களும் அடிமையாவீர்கள். செய்வது சுலபம் போன்று தோன்றினாலும், இதை வேறு ஊர்களில் செய்யும்போது இது போன்ற சுவை வருவதில்லை என்பது சத்தியமான உண்மை !!


Labels : Suresh, Kadalpayanangal, Ooty, Udagamandalam, Varkey, Varukki, Varki, Indian bakery, famous for, famous ooty varkey