Monday, November 20, 2017

ஊர் ஸ்பெஷல் - ஊட்டி வர்க்கி !! (பகுதி - 2)

ஊட்டி வர்க்கி (பகுதி - 1) படித்த பலரும் இன்று வரை ஊட்டி வர்க்கி என்பதை பற்றி இவ்வளவு தெரிந்து கொண்டதில்லை, ஆனால் இன்று இதை படித்த பிறகு எவ்வளவு சுவாரசியமான, சுவையான தகவல்கள் என்று பாராட்டினார்கள், நன்றி நண்பர்களே !! சென்ற பகுதியில் ஊட்டியின் பெயர் காரணம், வர்க்கி என்ற சொல் உருவான காரணம், பிஸ்கட், குக்கீஸ், ரஸ்க் என்பதின் வித்யாசம் எல்லாம் பார்த்தோம்... இந்த வாரம் வாருங்களேன் இந்த வர்க்கி என்பதின் சுவையான பயணத்தை தொடர்வோம் ! குன்னூர் சென்று வீட்டிற்கு வர்க்கி வாங்கி செல்ல வேண்டும், எங்கு கிடைக்கும் என்று கேட்டால் எல்லோரும் சொல்வது நியூ இந்தியன் பேக்கரி !! பல முறை ஊட்டி சென்று இருந்தபோதும், அவசர கதியில் கிடைத்த இடத்தில் வாங்கியதால் ஊட்டி வர்க்கி என்பதின் உண்மையான சுவையை தெரிந்து கொள்ள முடியவில்லை.... ஆனால் இந்த முறை ஊட்டி வர்க்கிக்கு புகழ் பெற்ற நியூ இந்தியன் பேக்கரி சென்றோம், உண்மையிலே ஊட்டிக்கு பெருமை சேர்க்கும் இடம்தான் !!




வாசனை.... எந்த ஒரு உணவு செய்யும்போதும் ஒரு வாசனையை வைத்து வாயினுள் ஒரு ஊற்று சுரக்கும். கேசரி செய்யும்போது நெய்யில் முந்திரி வறுக்கும் வாசனை, பேக்கரியில் பன் செய்யும்போது வரும் வாசனை, கடுகும் உளுந்தும் சேர்த்து தாளிக்கும்போது வரும் வாசனை, சோளக்கருத்தை சுடும்போது வரும் வாசனை, மீனை பொரிக்கும்போது வரும் வாசனை, சூடான காபியின் வாசனை, வெங்காய போண்டா பொரிக்கும்போது வரும் வாசனை, காரம் போட்ட மசாலா பொறியின் வாசனை, கடலையை வேக வைக்கும்போது வரும் வாசனை.... என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு அலாதியான வாசனை உண்டு, அது போலவே இந்த வர்க்கி என்பதற்கும் ! வர்க்கி செய்யும் இடத்திற்கு சென்றபோது அந்த இடமே இந்த வாசனையில் நிரம்பி இருந்தது, ஒரு உணவை சாப்பிடாமலே காதல் கொள்ளுவதென்பது இப்படிப்பட்ட வாசனையை வைத்துதான், வர்க்கியின் வாசனை என்பதை நீங்கள் உணர்ந்து பார்த்து இருக்கின்றீர்களா இதுவரை !!






வர்க்கி என்பதின் வடிவத்தை கவனித்து பார்த்து இருக்கின்றீர்களா ? ஒரு சிறிய பொட்டலம் போல, உங்களது உள்ளங்கையின் உள்ளே அடங்கிவிடும், கொஞ்சம் உற்று பார்த்தால் அடுக்கு அடுக்காக பிரிந்து, ஒரு மலரினும் மெல்லிய உடலினை கொண்டு, நீங்கள் கொஞ்சம் அமுக்கி பிடித்தாலே பொல பொலவென உதிரும் இந்த வடிவம் அதிசயம்தான். முதலில் இந்த வர்க்கி எப்படி செய்வது என்று பார்த்து விடுவோம், பின்னர் இந்த பயணத்தில் நடந்தவைகளை பார்ப்போம்... வர்க்கி செய்வதற்கு பெரிய அளவில் பொருட்கள் எல்லாம் தேவை இல்லை, ஆனால் இங்கு முக்கியம் ஈஸ்ட் என்பதுதான். இந்த ஈஸ்ட் என்பதுதான் இதனின் சுவைக்கான முக்கிய காரணம். மைதா, தயிர், சர்க்கரை, தண்ணீர் ஆகியவற்றை நன்கு நீர்க்க கரைத்து, காற்று புகாமல் மூடி வைத்து, 2 நாட்கள்  கழித்து திறந்து பார்த்தால் வருவது ஈஸ்ட்.  இதை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில்  வைத்திருந்து உபயோகிக்கலாம். இதன் செய்முறையை பாருங்களேன்...





மைதா -   2 கப்
சர்க்கரை -  3 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
டால்டா - கால் கப்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு டீஸ்பூன்
ஈஸ்ட் - இரண்டு சிட்டிகை (ஃப்ரெஷ் ஈஸ்ட்) 
தண்ணீர் - தேவையான அளவு.

மைதாவை ஈஸ்ட் சேர்த்து தண்ணீர் விட்டு இளக்கமான மாவாகப் பிசைந்து ஓர் இரவு முழுதும் ஈரத்துணி போட்டு ஊற விடவும்.மறுநாள் அந்த மாவை நன்கு பிசையவும். டால்டா, எண்ணெய், நெய், உப்பு, சர்க்கரையை அடுப்பில் வைத்து கரையும் வரை சூடு செய்து மாவில் ஊற்றி பிசையவும். மாவு,  எண்ணெய்களை இழுத்து நன்கு நீண்டு வரும். மிருதுவான தன்மை வரும் வரை பிசைய வேண்டும். தேவைப்பட்டால் சிறிது  டால்டா சேர்த்துக் கொள்ளலாம்.ஒரு இன்ச் தடிமனுள்ள சப்பாத்தி போல திரட்டி ஒன்றரை இன்ச் அகலத்தில் மாவை குறுக்கு  வெட்டாக வெட்டவும். அதனை விரல்களால் சுருட்டி இறுதியில் எதிர் திசையில் மடித்தால் வர்க்கியின் மடிப்பு வரும்.அவனை (Oven) அதன்  அதிகபட்ச வெப்பத்தில் 10 நிமிடம் சூடாக்கவும். இருபுறமும் சூடாவது போல செட்டிங் மாற்றி, 180 டிகிரியில் 20 முதல் 30  நிமிடம் வேக விடவும்.வெந்ததும் சிறிது ஆறவிட்டு, காற்று புகாத பாத்திரத்தில் எடுத்து வைக்கலாம்.



வர்க்கி எப்படி செய்வது என்பதை பார்த்தாகிவிட்டது, இனி பயணத்தின் அனுபவத்தை பார்ப்போமா ? குன்னூர் சென்று நியூ இந்தியன் பேக்கரி சென்று வர்க்கி வாங்கி கொண்டே, சற்று கண்களை ஓட்டி பார்த்தபோது அங்கு வர்க்கி தயாரிப்பதாக தெரியவில்லை, நான் இப்படி எட்டி எட்டி பார்ப்பதை கவனித்த கடைக்காரர், என்ன வேண்டும் என்று கேட்க, அந்த பிஸியான வியாபார சமயத்திலும் என்னை பற்றி கூறி விட்டு, உங்களது வர்க்கி செய்யும் முறையை பார்க்க வேண்டும் என்றேன். இந்த பிஞ்சு மூஞ்சியை பார்த்துவிட்டு, சிறிதாக நகைத்துவிட்டு, வர்க்கி இங்கிருந்து சற்று தள்ளி இருக்கும் இடத்தில் செய்வதாகவும், அந்த இடத்தின் விலாசத்தினை தந்தார்...... ஆகா, நான் வர்க்கி பார்க்க போறேனே, என்று மனம் குத்தாட்டம் போட்டது.




அந்த சிறிய அறையினுள் நுழைவதற்கு முன்னரே வாசனை என்னை தாக்கியது. எனது கண்களை கட்டி விட்டு இருந்தால் கூட அந்த இடத்திற்கு சரியாக வாசனையை வைத்து சென்று இருப்பேன் ! வர்க்கி செய்யும் இடத்தை பார்த்தால், எங்கெங்கும் மைதா மாவை பிசைந்து இருப்பதையும், அதை வர்க்கியாக மடித்து வைத்து இருந்ததையும், அதை ஓவென் கொண்டு வர்க்கியாக மாற்றி வைத்து இருந்ததையும் மட்டுமே காண முடிந்தது. அவர்களின் வேகம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஒருவர் கல்லின் மீது இருந்த மாவை அடித்து பிசைவதையும், இன்னொருவர் அப்படி பிசைந்த மாவினை தட்டையாக்கி கத்தியினை கொண்டு வெட்டுவதையும், இன்னொருவர் அதை பொட்டலம் போல மடிப்பதையும் பார்க்கும்போது இவர்களின் அத்தனை வருட அனுபவமும் கண் முன்னே வந்தது.



ஒரு சிறிய ட்ரேயில் அந்த பொட்டலம் போன்று மடித்த வர்க்கியை அடுத்து ஒரு பெரிய உலையின் உள்ளே வைத்துவிட்டு, அங்கேயே நின்று கவனித்து பார்க்க, அது பொரிந்து வந்த அந்த தருணம் உண்மையிலேயே உணவு பிரியர்களின் சொர்க்க தருணங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த வெள்ளை நிற மாவு பொன்னிறமாக ஆக ஆரம்பிக்க, இன்னொரு தட்டு ரெடி ஆனவுடன் அதை வெளியே எடுத்து வைக்க, எனது கண்கள் அதையே விழுங்கி கொண்டு இருந்தன. அதை சிரித்துக்கொண்டே பார்த்த அந்த பெரியவர், ஒரு சிறிய தாளில் ஒன்றை வைத்து கொடுக்க.... ஊதி ஊதி அந்த ஊட்டி வர்க்கி சாப்பிட்ட அந்த பொன்னான தருணம், மறக்க முடியாத ஒன்று !


அடுத்த முறை ஊட்டி சென்றால் மறக்காமல் இங்கு ஊட்டி வர்க்கி வாங்கி சுவைத்து பாருங்கள், வாயில் வைத்தவுடன் கரையும் அந்த மன்மத சுவைக்கு நீங்களும் அடிமையாவீர்கள். செய்வது சுலபம் போன்று தோன்றினாலும், இதை வேறு ஊர்களில் செய்யும்போது இது போன்ற சுவை வருவதில்லை என்பது சத்தியமான உண்மை !!


Labels : Suresh, Kadalpayanangal, Ooty, Udagamandalam, Varkey, Varukki, Varki, Indian bakery, famous for, famous ooty varkey

5 comments:

  1. எத்தனை நாளாயிற்று ? அண்ணனின் இந்த ரசம் சொட்டும் உரை படித்து? சிங்கம் களம் இறங்கிருச்சுன்னு சொல்லி முதுகில் சவாரி செய்யலாமா, இல்ல, அண்ணனுக்கு வேல ஜாஸ்தின்னு சொல்லி கட்டுரையை பாராட்டிட்டு மட்டும் விட்றலாமான்னு யோசனை?!!!!!! As usual sensational replica of what you experienced. The stuff you have to transpire what you seen/taste/experience is simply amazing, well done.

    ReplyDelete
  2. கடந்த முறை ஊட்டி சென்ற போது இதே இந்தியன் பேக்கரியில்தான் வர்க்கி வாங்கி வந்தேன். குன்னூர் பஸ் நிலையல் அருகே உள்ளது. சுவை அபாரம்

    ReplyDelete
  3. [எத்தனை நாளாயிற்று ? அண்ணனின் இந்த ரசம் சொட்டும் உரை படித்து ]
    பாபு அருமையான பொருத்தமான வசனம்.

    ReplyDelete
  4. At least one time in life ooty varkee should be tasted.

    ReplyDelete
  5. ஊட்டி வர்க்கி தொடர்பு தொலைபேசி என் பதிவு செய்யவும்

    ReplyDelete