Pages

Wednesday, November 22, 2017

மறக்க முடியா பயணம் - அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி !!

நீர்வீழ்ச்சி எனும்போது அந்த ஆர்ப்பரிக்கும் ஓசையும், அந்த குளிர்ச்சியும் எப்போதும் மனதில் வரும்.  இந்த முறை ஒரு நீர்வீழ்ச்சி செல்ல வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்தபோது, அர்ஜுனா அர்ஜுனா என்று தங்க தலைவி நமிதா டிவியில் ஆடிக்கொண்டு இருந்தார், அப்போது இப்படி ஒரு நீர்வீழ்ச்சிக்குத்தான் செல்லவேண்டும் என்று முடிவெடுத்து தேட ஆரம்பித்தபோது, அவர் இடுப்பை நெளித்து ஆடியது நமது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி என்று தெரிந்தது ! அடுத்து அங்கே செல்லும் பயணம் ஆரம்பமானது.... என்ன சோகம் என்றால், செல்லுவதற்கு ஆயத்தமானது எல்லாம் ஆண் பிள்ளைகள் !!



கோயம்பத்தூரில் இருந்து சுமார் 165 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த நீர்வீழ்ச்சி, நான்கு மணி நேர பயணம் ! தமிழ்நாடு எல்லை வரைக்கும் ரோடு போட்டுக்கொண்டே டே டே டே டே டே இருப்பதால் பயணம் சற்று மேடு பள்ளமாக இருக்கிறது. அதன் பின்னர் ரோடு நன்றாக இருப்பதால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நாங்கள் முதல் நாள் மாலை சுமார் ஆறு மணிக்கு கிளம்பி சாலக்குடி என்னும் ஊருக்கு சென்று விட்டோம், அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு புட்டும் கடலைக்கறியும், கட்டன் சாயாவும் குடித்துவிட்டு புறப்பட்டு விட்டோம். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழி நன்றாகவே இருந்தது, வழியெல்லாம் பல பல ஹோட்டல் இருந்தது, சாலக்குடியில் தங்கியதை விட இங்கே வந்து இருக்கலாமோ என்று தோன்றியது.




சுமார் ஒரு மணி நேர பயணத்தில் ஒரு சிறிய திருப்பத்தில் நிறைய வண்டிகளும், கடைகளும் இருக்கும் இடத்தை அடைந்தபோது, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வந்து விட்டது என்று அறிந்தோம். சுமார் 15 கடைகள், ஒரு சிறிய போர்டு அழகே வரவேற்றது. இங்கு நிறைய பேருந்துகள் வருகின்றன என்று ஒரு பதாகையை பார்த்தவுடன் தெரிந்தது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி என்பது ஒரு தொடக்கம்தான் என்றும், அதனை தொடர்ந்து சென்றால் வலைச்சல் நீர்வீழ்ச்சி, சர்ப்ப நீர்வீழ்ச்சி என்று அடுத்தடுத்து வருவதை அறிய முடிந்தது. விஷயம் தெரிந்த பலர், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி கூட்டமாக இருக்கிறது என்று இருக்கும் வாகனங்களை வைத்து கணக்கு போட்டு அடுத்த நீர்வீழ்ச்சிக்கு செல்வதை காண முடிந்தது. டிக்கெட் வாங்கி கொண்டு நீர்வீழ்ச்சி செல்லும் பாதையில் பயணிக்க தொடங்கினோம்.... டேய், நீர்வீழ்ச்சிக்கு சொய் என்று செல்லுமாறு ஒரு சறுக்கு மரம் வைக்க கூடாதா !!




முதலில் நடக்க ஆரம்பிக்கும்போது நல்ல பாதை போன்று தோன்றினாலும், சிறிது தூரத்தில் மலை இறங்க ஆரம்பிக்கும்போது சற்று ஆபத்தானதாக இருக்கிறது !  நம்ம தங்க தலைவி நமீதா ஆடிய இடம் எல்லாம் இறங்கி குளிக்க அனுமதி கிடையாதாம், அங்கு பக்காவாக கயிறு கட்டி, போலீஸ் போட்டு வைத்து இருக்கிறார்கள். அந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்று சிறிது படம் எடுக்க மட்டுமே அனுமதி ! அப்போ அருவி குளியல் ?!




குளிக்க முடியாதா என்று ஏக்கம் வரும்போது, அருகில் இருந்த சிலர், இந்த மலை உச்சிக்கு செல்லுங்கள் அங்கே குளிக்க முடியும் என்றனர். நடந்து வந்த போது, ஒரு நல்ல பாதை முடிந்து மலை இறங்க ஆரம்பித்தபோது இப்படி குளிக்க முடியாது என்ற பதாகை எதுவுமே இல்லையென்பதால், நிறைய பேர் தெரியாமல் கீழே தட்டு தடுமாறி இறங்கி மூச்சு வாங்கி கொண்டு இருந்தனர். கீழே இறங்கியதை விட, மேலே ஏறும்போது நிறைய இடங்களில் சறுக்கி விடுகிறது. ஒரு வழியாக மேலே ஏறி வந்தபோது அந்த நெடிய ஆறு விழும் இடம்தான் குளிப்பதற்கு என்று புரிந்தது, அந்த நீர்தான் நீர்வீழ்ச்சியாக கீழே சென்றது ! 


முடிவில் அந்த ஆற்று படுகையை பார்த்தபோது எங்கும் பாறைகள், எதிலும் பாறைகள் மட்டுமே. நாங்கள் சென்ற சமயத்தில் அங்கங்கு சில இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடி கொண்டு இருந்தது. ஆடைகளை களைந்துவிட்டு ரெடி ஆனோம். ஒரு காலை வேளையில், சில்லென்று வீசும் காற்றின் முன், ஒரு சிறு ஆடையை மட்டும் இடுப்பில் கட்டிக்கொண்டு, ஐஸ் போன்று ஓடிக்கொண்டு இருக்கும் தண்ணீரில் இறங்க எவ்வளவு தைரியம் தேவை தெரியுமா ? இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பது என்பதே ஒரு கலை எனலாம், முதலில் நுனி காலை விட்டு அந்த குளிர்ச்சியில் நடுங்க வேண்டும், அடுத்து முட்டிகால் வரை, மனதில் வேண்டாம் என்று தோன்றினாலும், அடுத்து சிறிது தண்ணீரை எடுத்து உடம்பின் மேலே ஊற்றிவிட்டு, இந்த தண்ணீரில் குளிப்பார்களா யாராவது என்று புலம்ப வேண்டும், அடுத்து எல்லோரும் பகடி செய்தவுடன் ஒரு வீரம் வந்து தொபுக்கடீர் என்று குதிக்க வேண்டும், ஐயோ என்று கத்திவிட்டு வெளியே ஓடி வந்து, மீண்டும் பின்னர் இதுபோல ஒரு மூன்று முறை செய்தபின்பு அந்த ஆற்று நீரில் ஒரு எருமையை போல விழுந்து கிடக்க கிடக்க.... ஒரு ஜென் நிலையை அடைவோம் !!



இத்துடன் இந்த பயணம் முடிவதில்லை, ஒரு நீர்வீழ்ச்சி சென்று குளித்து முடித்து வந்தவுடன் வயிறு மிக பயங்கரமாக பசிக்க ஆரம்பிக்கும். அதுவும் இறங்கிய பாதையில் இப்போது பசியுடன் ஏறும்போது இன்னும் அதிகமாக பசிக்கும், அப்போது எதை குடுத்தாலும் ருசி பார்க்காமல் சாப்பிடுவோம். இந்த இடத்தில், அவ்வளவாக கொறிக்க எதுவும் கிடைப்பதில்லை, ஆகவே உங்களுக்கு உண்டானதை நீங்களே கொண்டு செல்லுங்கள் !! என்ன முடிவெடுத்துவிட்டீர்களா.... அடுத்து உங்களது பயணம் இங்குதானா ?!

Labels : Suresh, Kadalpayanangal, Athirapally, Athirapalli, Waterfalls, kerala, near coimbatore, waterfalls near coimbatore, marakka mudiyaa payanam

4 comments:

  1. ஒவ்வொரு பயண அனுபவ முடிவிலும் வழித்தடங்கள் குறித்து இன்னமும் விபரமாக எழுதுங்க சுரேஷ். முடிந்தால் கூகுள் மேப் இணைத்து விடுங்க.

    ReplyDelete
  2. நீர்வீழ்ச்சியில் நமீதாவோடு ஆட்டமும் போட முடில. நமீதா ஆட்டம் போட்ட இடத்துலயும் ஆட்டம் போட முடியல. என்னடா ஒரு பதிவருக்கு சோதனை?

    ReplyDelete
  3. நல்ல நகைச்சுவையான எழுத்து நடை! ஹ ஹா!

    ReplyDelete