Wednesday, November 29, 2017

ஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் !!

தூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுகம் மட்டுமே நியாபகத்துக்கு வரும் ! ஒரு முறை கொடைக்கானல் சென்று கொண்டு இருக்கும்போது, ஒரு ஹோட்டலில் நிறுத்தி சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது அங்கே தூத்துக்குடி மக்ரூன் என்று ஒரு பாக்கெட் இருந்தது, கொஞ்சம் ஸ்வீட் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று எல்லாவற்றையும் பார்த்தபோது இந்த மக்ரூன் பாக்கெட் ஒன்றையும் பார்த்தும் எனக்கு வாங்க தோன்றவில்லை, ஆனால் சிலர் ஒன்று இரண்டு என்று போட்டி போட்டு வாங்கி சுவைக்கும்போது, நானும் ஒன்றை வாங்கி வாயில் போட்டபோது அப்படியே கரைந்து சென்றது... தூத்துக்குடி உப்பளங்கள் மட்டும் பேமஸ் இல்லை, என்று புரிந்த நாள் அன்று !!





தூத்துக்குடி இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். நீர் நிறைந்த நிலத்தைத் தூத்துத் துறைமுகமும் குடியிருப்பும் தோன்றிய ஊர் என்பதால் தூத்துக்குடி என்றானது. இது ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10ஆவது மாநகராட்சியாக ஆகஸ்ட் 52008 இல் அப்போதைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும்உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. கி.பி. 1532-இல் முதன் முதலாக போர்ச்சுக்கீசியர்கள் இம்மாவட்டத்தில் கால் வைத்தனர். 1658-இல் டச்சுக்காரர்கள் வந்ததனால் போர்ச்சுகல் ஆதிக்கம் அகன்றது. பாளையக்காரர் களின் அழைப்பின் பேரிலும், திருவாங்கூர் மன்னரின் படை உதவியுடனும், டச்சுக்காரர் கள் முன்னேறத் தொடங்கினர். முகம்மது யூசுப் படைதிரட்டுவதை கேள்விப்பட்டதும் டச்சுக்காரர்கள் மணப்பாட்டை காலி செய்து விட்டு, தூத்துக்குடி வழியாக தாய்நாடு சென்று விட்டனர். நாயக்கர் ஆட்சி சந்தாசாகிப்பினால் முடிவுற்றது. கர்நாடகம்ஆற்காடு நவாப் கையில் விழுந்தது. முகம்மதலி திருநெல்வேலியைக் கைப்பற்ற ஒரு படையை அனுப்பினார். 1755-இல் ஹெரான் தலைமையில் ஆங்கிலேயர் படை கிளம்பியது. பாளையக்காரர்கள் கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் இரண்டையும் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் ஒப்படைத்தனர். இக்காலத்தில் நவாப்பிற்குக் கப்பங்கட்ட மறுத்தவர்களில் தலையானவர் பூலித்தேவர் ஆவார். தூத்துக்குடி நகருக்கு திருமந்திர நகர் என்றும் முத்துநகர் என்றும் வேறு சிறப்புப் பெயர்களும் இருக்கின்றன. 







மக்ரூன் என்பது ஒரு போர்த்துக்கீசியச் சொல்லாகும். மக்ரூன் என்றால் போர்த்துக்கீசிய மொழியில் “முந்திரியும் முட்டையும் கலந்த இனிப்பு” என்று பொருள். வணிகத்திற்காகவும், மதத்தைப்ப ரப்புவதற்காகவும் இந்தியாவின் தென்பகுதிக் கடற்கரைக்கு வந்த போர்த்துக்கீசியர்கள் தங்கள் நிர்வாகத்திற்கேற்ற இடமாக தூத்துக்குடியைத் தேர்வு செய்து அங்கேயே தங்கியிருந்தனர். இவர்கள் மக்ரூனை விரும்பிச் செய்து சாப்பிட்டனர். வெள்ளை நிறத்திலிருக்கும் இந்த இனிப்பு வாயில் போட்டாலே கரைந்து விடும். எனவே இதை குழந்தைகள் கூட விரும்பிச் சாப்பிடும். மக்ரூன் தயாரிப்பில் தூத்துக்குடிதான் இன்னும் பெயர் பெற்று விளங்குகிறது. தூத்துக்குடியை நிர்வகித்த பிரபுக்களும் பாதிரிமார்களும் பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் இருந்து கொல்லம் வழியாக கப்பல்களில் முந்திரிக்கொட்டைகளைக் கொண்டுவந்து மக்ரூன் செய்து சாப்பிட்டார்கள். கொல்லம் வழியாக வந்ததால் முந்திரிக்கொட்டையை தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் கொல்லாக்கொட்டை என்று அழைக்கிறார்கள்.




உங்களில் ஒரு சிலர், நான் வெளிநாடு சென்றபோது மக்ரூன் என்பதை பிஸ்கட் போன்று பார்த்தேன், ஆனால் இங்கு கூம்பு வடிவில் இருக்கிறதே என்று கேட்டால்.... உங்களுக்காகவே இந்த விளக்கம். பிரான்ஸ் நாட்டில் இதை மாகேரோன் (Macaron) என்பார்கள், நம்மவர்கள் இதை மக்ரூன் (Macroon) என்பார்கள், இரண்டுக்கும் வித்யாசம் என்பது தேங்காய் மற்றும் பாதாம் என்பதுதான் ! போர்த்துகீசியர்கள் இங்கே வருவதற்கு முன்பு இந்த மாகேரோன் என்பதை பாதாம் பவுடர், முட்டை மற்றும் ஐசிங் சர்க்கரை ஆகியவற்றை கொண்டு செய்தனர், இந்தியா வந்த பின்பு இந்த மாகேரோன் என்பதை மிகவும் மிஸ் செய்ததால், இங்கு இருக்கும் பொருட்களான முந்திரி, சர்க்கரை, முட்டை கொண்டு செய்தனர், அதுவும் இதை போன்றே சுவை இருந்தது. காலப்போக்கில், நமது மக்கள் தேங்காய் சேர்த்து அதை மக்ரூன் ஆக்கிவிட்டனர். தயவு செய்து யாரும் ஐரோப்பா சென்றால், அட மக்ரூன், இதை எங்கள் ஊரிலும் செய்வார்களே என்று அவர்களை வெறியேற்ற வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன் !!


 

இந்த முறை தூத்துக்குடி சென்றபோது, மக்ரூன் என்பதை சுவைக்கவும், அதை செய்வதை பார்க்கவும் நினைத்தேன். ஒரு காலை பொழுதில் மதுரையில் இருந்து கிளம்பி சென்று தூத்துக்குடியை அடைந்தபோது, அந்த உப்பு காற்றின் ஸ்பரிசம் வரவேற்றது. ஊருக்குள் நுழையும் முன்னரே, இங்கே நல்ல மக்ரூன் எங்கு கிடைக்கும் என்று கேட்டதற்கு.... எல்லோரும் சொன்னது கணேஷ் பேக்கரி மற்றும் ஞானம் பேக்கரி என்று ! ஏலேய், வண்டிய விட்றா கோவாலு !! தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகிலேயே இருக்கிறது இந்த ரெண்டு கடைகளும். வழக்கமான பேக்கரி போல வெளியில் இருந்து பார்த்தால் பப்ஸ், கேக் என்று இருந்தது. நமது முகத்தில் இருந்த தேடலை பார்த்தே அந்த பேக்கரி ஆள் கேட்டார்.... மக்ரூன் வேணுமா ?!

ஞானம் பேக்கரி... பேருந்து நிலையம் எதிரே !

கணேஷ் பேக்கரி... எல்லோரும் பரிந்துரைப்பது... பேருந்து நிலையத்தில் இருந்து 5 நிமிட தூரத்தில் !

தனலட்சுமி பேக்கரி... இவர்கள்தான் மக்ரூன் இந்த வடிவத்துக்கு காரணம் என்கிறார்கள் ! தலைமுறை தலைமுறையாக இருக்கிறதாம் இந்த பேக்கரி !!

நமது தலை வேக வேகமாக ஆட ஆரம்பிக்கிறது, ஒரு சிறிய பாக்கெட்டில் வைத்து நமக்கு நீட்ட, கமல்ஹாசன் இரண்டு லட்டுவை வைத்துக்கொண்டு ஒரு ஏகாந்த பார்வை பார்ப்பாரே அதுபோலவே நாமும் கையில் வைத்துக்கொண்டு பார்த்த பார்வைக்கு கடைக்காரர் ஒரு ஜெர்க் அடித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்... அவனா நீயி, என்று நாம்தான் அர்த்தம் கொள்ளவேண்டும். ஒரு கொழுக்கட்டையின் கனத்தை எதிர்பார்த்து ஒன்றை வாங்கினால், மிகவும் இலவு ஆக இருந்தது கண்டு ஆச்சர்யப்பட்டோம். அந்த கூம்பு வடிவத்தை பார்த்தால், நமது தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வெள்ளை பெயிண்ட் அடித்தது போன்று இருந்தது. ஒன்றை எடுத்து கடிக்க... பல்லில் பட்டதுதான் தெரியும், பாகாய் கரைந்தது வாயில். இந்த மக்ரூன் என்பதின் குணாதிசயமே இந்த கரைதலில்தான் இருக்கிறது, அந்த கரைதலின் சுகத்தை வார்த்தைகளில் எழுத முடியாது, அப்படி ஒரு பேரனுபவம். கொஞ்சம் கொஞ்சமாக, கருக் மொறுக் என்று கரையும் இந்த மக்ரூன்..... உலகின் சுவையான தின்பண்டங்களில் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை !






நாம் சாப்பிட்ட முறையை பார்த்து ரசித்து கொண்டு இருந்தார் அந்த பேக்கரி முதலாளி, சிறிது சிறிதாக அங்கேயே நாங்கள் எங்களது காலை உணவாக இந்த மக்ரூன் என்பதை சாப்பிட்டது கண்டுகொண்டிருந்தார். அவரிடம் நாங்கள் இந்த மக்ரூன் செய்முறையை பார்க்க வேண்டும், பெங்களுருவில் இருந்து வந்து இருக்கிறோம் என்றபோது, பல பல கேள்விகளுக்கு பிறகு அனுமதித்தார். உள்ளே நுழைந்து பார்த்தபோது ஒரு பக்கத்தில் கிடந்த முட்டை குவியலை கண்டு மலைத்த எங்களை, இந்த மக்ரூன் என்பதின் முக்கிய விஷயமே இந்த முட்டையின் வெள்ளை கருதான் என்று விளக்கினார் அங்கு மக்ரூன் செய்முறையில் கைதேர்ந்தவரான ஒருவர். முட்டையின் வெள்ளை கருவை மட்டும் பிரித்து எடுத்து அதை பருப்பு கடைவதை போன்று கடைகின்றனர், அது நுரை ததும்ப ததும்ப வர, அதில் முந்திரியின் சிறிய துகள்களை கொண்டும், ஐசிங் சர்க்கரை கொண்டும் மீண்டும் கடைய, முடிவில் பேஸ்ட் போன்று வருகிறது. அதை ஒரு கோன் கொண்டு எடுத்து டிரேயில் மக்ரூன் வடிவத்தை கொண்டு வருகின்றனர் (ஒவ்வொரு பேக்கரியும் ஒவ்வொரு வடிவத்தை வைத்து இருக்கின்றனர், வெளியில் இருந்து பார்த்தால் கூம்பு வடிவம்தான், ஆனால் சுற்று, கூம்பு மட்டம் என்று சற்று மாறுகிறது, இதனால் எந்த பேக்கரி மக்ரூன் என்று கண்டுபிடிக்கலாம் !!), முடிவில் அதை கொண்டு ஒவெனில் வைத்து எடுக்க, மக்ரூன் தயார் !! 
குறிப்பு : பேக்கரி முதலாளி பெரிய மனதுடன் எங்களை மக்ரூன் செய்வதை காண அனுமதித்தாலும், புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ஆகவே, கீழே இருக்கும் புகைப்படங்களை கூகிள் இமேஜ் மூலம் கண்டறிந்து இங்கு உங்களுக்காக பகிர்கிறேன். புகைப்படம் எடுத்தவர்க்கு நன்றி !! 





அடுத்த முறை தூத்துக்குடி செல்லும்போது மக்ரூன் சாப்பிட மறக்காதீர்கள். உப்பளங்களுக்கு மட்டுமே புகழ்பெற்றதில்லை தூத்துக்குடி என்பதை மனதில் கொண்டு, மக்ரூன் சுவையில் கரைந்து போக மறக்காதீர்கள். ஒரு முறை சுவைத்துவிட்டால், மீண்டும் சுவைக்க தூண்டும் சுவை... மிஸ் பண்ணாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க !!


Labels : Suresh, Kadalpayanangal, Thoothukudi, Tuticorin, Macaroon, Macroon, Makroon, French, Tasty snack, Tamilnadu, district special, oor special, oorum rusiyum

4 comments:

  1. இந்தப் புத்தகம் படித்திராவிடில், உங்களின் உணவுத் தேடலுக்குக் கண்டிப்பாக உதவும்.
    https://puththakam.wordpress.com/2016/03/20/162-where-to-eat-what/

    ReplyDelete
  2. பாஸ், என்ன ஆளையே காணோம்?

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete