Thursday, January 24, 2019

அறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் !!

கடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி ! ஒரு சுவையான பயணத்திற்கு இத்தனை ரசிகர்களா என்று நான் நன்றியுடன் தலைவணங்குகிறேன். கடந்த இரண்டு வருடத்தில், டெக்னாலஜி என்பது படிப்பதில் இருந்து பார்ப்பதில் வளர்ந்து விட்டாலும், இன்றளவும் என்னுடைய எழுத்துக்கு ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பதை ஆண்டவன் அருள் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது.... நன்றி !!
*********************************************************************************
எப்போதும் சேலம் வழியாக செல்லும்போது மதிய நேரம் என்றால் எந்த ஹோட்டல் நன்றாக இருக்கும் என்றுதான் தேட தோன்றும், ஆனால் இந்த முறை மதிய சாப்பாட்டை முன்பே முடித்துவிட்டபடியால் சற்று நொறுக்கு தீனியாக சாப்பிடலாமே என்று நினைத்தபோதுதான், நமது சேலத்து நண்பர் பரிந்துரைத்தது இந்த குவாலிட்டி புட்ஸ் ! நமது ஊரில் பல வகையான கடைகள் இருக்கின்றன.... டீ கடை, சாட் ஐட்டம் கடை, பாஸ்ட் புட் கடை, பரோட்டா கடை, வடை கடை, ஜூஸ் கடை, ஸ்வீட் கடை, போளி கடை, மீன் கடை, சிக்கன் கெபாப் கடை, சூப் கடை, ஐயங்கார் பேக்கரி, சாண்டவிச் கடை, பணியாரம் கடை, அதிரசம் மற்றும் தமிழ்நாடு பாரம்பரிய ஸ்வீட் கடை என்று நீளும் பட்டியல் இது. இந்த எல்லா கடை மாடல் எடுத்து கலந்து அரைத்து எடுத்தால் அதுதான் இந்த குவாலிட்டி புட்ஸ் !

அவர்களது வெப்சைட் முகவரி... குவாலிட்டி புட்ஸ் !சேலம் அக்ராஹாரம் தெரு என்பது மிகவும் நெருக்கம் மிகுந்த இடம், அங்கு பட்டை கோவில் அருகில் இருக்கிறது இந்த கடை. ஜன நெருக்கடி மிகுந்த இடம் என்பதால் காரில் செல்பவர்கள் சேலம் பஸ் ஸ்டாண்டில் காரை பார்க் செய்துவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து செல்வது நலம், டூ வீலரில் செல்பவர்கள் பார்க்கிங் சற்று சிரமம் இருந்தாலும், கிடைத்த இடத்தில் பார்க் செய்து விடவும். உள்ளே நுழையும்போதே அங்கு கண்களை ஓட்டினால் அங்கு எல்லாமும் இருப்பது தெரியும் !
கண்களை மேயவிட்டு அங்கு என்ன சாப்பிடலாம் என்று நினைக்கும்போதே, நம்மை கவனித்துவிட்டு "என்ன சாப்பிடறீங்க ?" என்று கேட்கிறார்கள். என்ன ஸ்பெஷல் என்று கேட்டபோது, கசகசா அல்வாவும், தயிர் முறுக்கும் என்று சொல்லும்போதே நமக்கு தூக்கி வாரி போடுகிறது. திருநெல்வேலி அல்வா கேள்வி பட்டு இருக்கிறேன், கசகசா என்பது எனது அம்மா சமையலில் உபயோகிப்பார்கள், அதை கொண்டு அல்வா எப்படி செய்ய முடியும் என்று தோண ஆரம்பித்து விடுகிறது. சரி, ஒரு பிளேட் குடுங்க என்று சொல்லிவிட்டு கண்களை சுழல விட்டால்.... நாம் இதுவரையில் கேள்வி பட்டு இருக்காத பொடி வகைகள், ஸ்வீட் மற்றும் கார வகைகள் என்று வெளுத்து வாங்குகிறது இந்த கடை !

கசகசா அல்வா  !
இந்தாங்க என்று நமது டேபிளில் வைக்கப்பட்டு இருக்கும் கசகசா அல்வாவையும், தயிர் முறுக்கையும் குறு குறுவென பார்க்கிறோம். என்னதான் பக்கத்தில் இருப்பவர் இதே பதார்த்தத்தை, யதார்த்தமாக வெட்டி கொண்டு இருந்தாலும், உள்மனது நீ சாப்பிட போவது கசகசா அல்வா என்று ட்ரெயின் ஸ்டேஷன் அனௌன்ஸ்மென்ட் போல சொல்லிக்கொண்டே இருப்பதை என்னவென்று சொல்ல. ஒரு விள்ளல் வாயில் எடுத்து வைத்தவுடன் "சொய்ங்" என்று அந்த சுவைக்கு வயிறு தன்னால் இழுத்துக்கொள்ள, முதல் விள்ளலில் நாக்கு அதன் சுவையை கணிக்க முடியவில்லையே என்று ஏங்கும்போது நாம் அடுத்த விள்ளலை எடுக்க ஆரம்பித்து விடுகிறோம். கேசரி போன்றும், அல்வா போன்றும் நல்ல ஒரு சுவை.... இதை நான் உங்ககிட்ட எதிர்பார்கலை சென்றாயன் !!

தயிர் முறுக்கு !
அடுத்து தயிர் முறுக்கு, இதுவரையில் அரிசி முறுக்கு சுவைத்து பார்த்து இருக்கிறேன், அதில் அரிசியின் சுவை மற்றும் எண்ணையின் சுவை மட்டுமே தெரியும், ஆனால் இந்த தயிர் முறுக்கில் புளித்த அந்த தயிரின் சுவை அருமையாக இருக்கிறது. ஒவ்வொரு வாய் எடுத்து வைக்கும்போது அடுத்த வாயிற்கு கைகள் தானாகவே சென்று விடுகிறது. நன்கு மொறு மொறுவென வெந்த அந்த சுவையான முறுக்கை நீங்கள் சுவைபட வெட்டலாம் !

இதுவரை சூப்பர் மார்க்கெட் மட்டுமே சென்று சில வகை ஊறுகாய் மற்றும் பொடி வகைகள் வாங்குபவரா நீங்கள் ? இங்கு சென்று பாருங்கள்... எல்லா சுவை வகைகளிலும் கிடைக்கிறது. நீங்கள் சற்று இளைப்பாறி டீ, சமோசா வகைகளையும் நொருக்கலாம். அடுத்த முறை சேலம் செல்லும்போது இங்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.... உங்களது சுவையினை அடுத்த தளத்திற்கு இட்டு செல்லலாம் !!
 


Labels : Suresh, Kadalpayanangal, Salem, quality foods, snacks, best taste, yummydrives

7 comments:

 1. பலமுறை சென்றுள்ளேன்... சுவைத்துள்ளேன்... ஆனால்...

  ஊறுகாய் மற்றும் பொடி வகைகளை வாங்கியதில்லை...

  இனிமேல்.....

  ReplyDelete
 2. welcome back Suresh, I'm a long time fan for ur blogs, keep writing

  ReplyDelete
 3. அருமை படங்களுடன் பகிர்ந்த விதம் இதற்காகவே சேலம்போகவேண்டும் எனத் தோன்றுகிறது.பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. தயிர் முறுக்கு வாய் ஊறுகிறது

  ReplyDelete
 5. Welcome back Suresh!

  கசகசா அல்வா, have to try soon :)

  ReplyDelete